உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமை குரல் உரத்து ஒலிக்கும் நாளாம் உலகப் பெண்கள் தினத்திலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது. உலக சமாதானம், வாக்குரிமை, வேலை நேர குறைப்பு என்ற பரந்து பட்ட கோரிக்கைகளின் பின்னணியில் உருவானதே இத்தினம். உலக அளவில் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரகடனம், 1910ல் கோபன்ஹேகன் நகரில் நடந்த இரண்டாவது சோஷலிச பெண்கள் மாநாட்டில், கிளாரா ஜேட்கின், அலெக்சாண்ட்ரா கொலந்தாய் போன்ற பெண் கம்யூனிஸ்டுகளால் முன்மொழியப் பட்டு, வெளியிடப்பட்டது. 1911 முதல் பல்வேறு நாடுகளில் பெண்களின் போராட்ட குரலாய், மார்ச் 8 ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோஷலிச நாடுகள் உருவான பின், பெண்ணுரிமை நடைமுறையில் வருவதற்கு உகந்த அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கள நிலை உருவாக்கப் பட்டது. பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றத்துக்கு இது வழி வகுத்தது.

இந்தியாவிலும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் வருவதற்கு முன்னமேயே கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பெண்கள் பெருமளவு வெற்றி பெறும் நிலை இருந்தது. இன்று இடது முன்னணி ஆளும் திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், ஒதுக்கப்பட்ட சதவிகிதத்தைத் தாண்டி, 57சதவிகிதமாக பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், வருடத்துக்கு சராசரி 88 நாட்கள் வேலை அளித்து, இந்தியாவிலேயே முதன் மாநிலமாக திரிபுரா திகழ்கிறது. பெண்கள் பேரில் தனி பட்டா, கணவன் மனைவி பேரில் கூட்டுப் பட்டா போன்ற அம்சங்களில் மேற்கு வங்க இடது முன்னணி அரசும், குடும்பஸ்ரீ போன்ற பெண்களின் வேலை வாய்ப்பு திட்டங்களில் கேரள இடது ஜனநாயக அரசும் முன்னோடியாக இருந்தன என்பதையெல்லாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தில் வாழ்வுரிமைக்கான இயக்கங்கள், வன்முறை எதிர்ப்பு போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்து வருகிறது. எத்துறையாயினும் பெண்கள் எவருக்கும் இளைத்தவரல்ல என்ற பாலின நிகர்நிலை கண்ணோட்டம் கிளர்ந்தெழுவதைப் பார்க்க முடிகிறது. பல்வேறு துறைகளில், தளங்களில் தடம் பதிக்கும் பெண்கள் அதிகரித்து வருவதும் வரவேற்கத் தகுந்த நிகழ்ச்சிப் போக்கு. அவதூறுகள், ஆபாச பதிவுகளைத் தாண்டி பெண்கள் கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும், முகநூல் உட்பட்ட சமூக வலை தளங்களில், ஊடகங்களில் கருத்துக்களைத் துணிச்சலாகப் பதிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. இது மேலும் மேம்பட வேண்டும்.

அதே சமயம், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. வன்முறைக்கு முக்கிய காரணமான போதை பழக்கத்தை அரசு, டாஸ்மாக் மூலம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. சாதி ஆணவ கொலைகள் அதிகம் நடக்கின்றன. முறைசாரா துறையிலும், வீடு சார் துறையிலும், அரசு திட்டங்களிலும் பணி புரியும் லட்சக்கணக்கான பெண்கள், எவ்வித சட்ட பாதுகாப்பும் இன்றி செயல்பட நேரிடுகிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்குவதன் மூலம், பெண் தொழிலாளிகளின் உரிமைகள் மீறப்படுகின்றன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் புகார் கமிட்டிகள் தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்னும் அமைக்கப் படவில்லை. மாநில மகளிர் ஆணையம் செயல்படுவதில்லை. 100 நாள் வேலையில் சராசரியாக 40 நாட்களே வேலை கிடைக்கிறது. கிடைக்கும் இடத்திலும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. கொடுக்கப்படும் ஊதியமும் வாரக்கணக்கில் நிலுவையில் நிற்கிறது. அனைத்து மட்ட ஊழல் காரணமாக, முதியோர், விதவை உதவித் தொகை முறையாகக் கிடைப்பதில்லை. குடிமனைப் பட்டா, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் பெரும் இடைவெளி உள்ளது. நிதி நிலை அறிக்கையில், அனைத்துத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு (ஜெண்டர் பட்ஜெட்டிங்) தருவதில்லை. பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை வளர்க்க அரசு எதுவும் செய்வதில்லை.

இந்நிலை மாற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், அவ்வளர்ச்சியின் பலன் பெண்களுக்குக் கிடைக்கவும் குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஏழை பெண்கள், சிறுபான்மை, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித், ஆதிவாசி பெண்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் களத்தில் நிற்கிறது. ஆணாதிக்கம், நிலவுடமை தத்துவம், முதலாளித்துவம் போன்ற பெண்ணுரிமைக்கு எதிரான கருத்தியலை மாற்றி, சமத்துவ உலகு படைக்கும் இலட்சியத்தில் முன்னேற, இந்நாளில் உறுதி பூணுகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...