உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து சட்ட மசோதாவை திரும்ப பெறுக! – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

மாநகராட்சி தலைவர்களை (மேயர்) மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை ரத்து செய்து மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறைக்கு வழிவகுக்கும் சட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல ஜனநாயக இயக்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டு மாநகராட்சி மேயரை மக்கள் தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டு வருமாறு வலியுறுத்தின.

இந்நிலையில் நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் தற்போதைய முறைக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை  தற்போது தமிழக அரசு சட்டமன்றத்தில அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையை வரிசையாக ரத்து செய்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இத்தகைய நடவடிக்கைகள் எதிர்கட்சியினர் இப்பதவிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெறும் வாய்ப்பை தடுக்கும் நோக்கம் கொண்டவை என்பதோடு ‘குதிரை பேரத்தின்’ மூலம் இப்பதவிகளை அஇஅதிமுக கைப்பற்றும் உள்நோக்கமும் கொண்டதாகும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்வு முறையிலும் அவற்றின் செயல்பாட்டிலும் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்த வேண்டும்; அவைகளுக்கு கூடுதலாக நிதியும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுவதோடு இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் தற்போதைய முறையே தொடர அனுமதிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

அஇஅதிமுக அரசின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை தடுத்து நிறுத்த ஒன்றுபட்டு செயலாற்ற முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...