உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (08.10.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

உலக மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2016ம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகள் புதிய உரிமைச் சட்டத்தின்படி 21 வகையான மாற்றுத் திறனாளிகளை அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் 10 கோடிப் பேருக்கு அதிகமாகவும், தமிழகத்தில் ஏறக்குறைய 70 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறித்த உருப்படியான எந்த கணக்கீடும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை என்பதும் உண்மை.

சமீப காலங்களில் மாற்றுத் திறனாளிகளிடம் தங்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவர்களின் அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்துவதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் குறித்து சமூக கண்ணோட்டத்தையும் மேம்படுத்த முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

இச்சூழலில் சமீப காலமாக மாற்றுத் திறனாளிகள் மத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இவர்களின் நியாயமான இக்கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...