உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் சின்னியம்பாளையம் தியாகிகளின் துணிவு.

கோவையில், புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில். 1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ், 1922ல் பெரும் நூற்பாலையாக வளர்ச்சியடைகிறது. இதில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு இளம் தொழிலாளிகள் பணிபுரிந்து வந்தனர்.

பஞ்சாலைகளில் நடக்கும் அட்டகாசங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக துணிவுடன் குரல் கொடுப்பார்கள். அதனால், 15 மணி நேர உழைப்புக்கு, அவர்களுக்குக் கிடைத்த மாதச் சம்பளம் 15 ரூபாய்தான். (மோடி இப்போது அந்த சூழ்நிலை பணிதளங்களில் உருவாக்க சட்டங்களை திருத்தம் செய்துள்ளார்). இதில், ராஜி என்ற பெண் தொழிலாளியும் முக்கியப் போராளியாக இருந்து வந்தார். குறிப்பாக, பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக, தனிப்பட்ட முறையில் பெண்களைத் திரட்டி துணிச்சலோடு குரல் கொடுத்தவர் ராஜி.

ஒரு நாள், பணி முடிந்து தோழர் ராஜி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு ஆலை முதலாளியின் அடியாட்கள் தோழர் ராஜியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொல்கிறார்கள். இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக பொன்னான் என்பவனை, நமது நான்கு இளம் தொழிலாளிகளும் – தியாகிகள் நால்வரும் தேடிப்பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். அதில் பொன்னான் இறந்து போனார்.

இதைத் தொடர்ந்து, அந்த 4 பேரையும் பலிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக மில் நிர்வாகம் காத்துக் கொண்டிருந்தது. காவல்நிலையத்தில் இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு தொழிலாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு தொழிலாளிகளையும் விடுவிக்க கடுமையான சட்டப் போராட்டம் நடந்தது. அன்றைய பிரிட்டீஷ் கவுன்சில் வரை சென்றது. இறுதியில், பெண் தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

1946ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு தோழர்கள் ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். பெண்கள் கதறி அழுக, தொழிலாளர்கள் முழக்கம் விண்ணைப் பிளக்க, அவர்களின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றும் ஸ்பின்னிங் மில்களில் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பிரச்னை இருந்துதான் வருகிறது. ஆம். அந்த கொடுமைகளை எதிர்த்து நிற்க சின்னியம்பாளையம் தியாகிகளைப் போன்ற துணிவுமிக்க போராளிகளை நாம் உருவாக்க வேண்டும். சின்னியம்பாளையம் தியாகிகளின் போர் இன்னும் முடியவில்லை…

– தோழர் ஆர்.கருமலையான்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...