ஊழலில் புதிய சிகரத்தை தொட்ட மோடி அரசு – தோழர் பிரகாஷ் காரத்

ஈரோடு, 22 – ஓராண்டு மோடியின் ஆட்சியில் அடுத்தடுத்து வெளிவரும் ஊழல்கள் புதிய சிகரத்தை தொட்டிருப்பதாக பிரகாஷ்காரத் குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சந்திர பேருந்து நிலையத்தில் புதனன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதாராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலு மற்றும் கே.துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் பங்கேற்று பிரகாஷ்காரத் உரையாற்றுகையில், மத்திய ஆட்சியில் இருந்த இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 ஆவது அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமென்வெல்த் ஊழல் என அடுத்தடுத்த அருவருக்கத்தக்க ஊழல்களால் இந்திய மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்தே மக்கள் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்து அதிகாரத்தை தந்தனர். ஆனால், மோடி தலைமையிலான பாஜகவின் ஓராண்டு ஆட்சிக் காலத்தில் ஊழலில் புதிய சிகரத்தை தொடும் வகையில் புதிய புதிய ஊழல்கள் அம்பலமாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் மீதும், மாநில பாஜக முதல்வர்கள் மீதும் அடுத்தடுத்த உயர்மட்ட ஊழல்கள் தற்போது அம்பலமாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் ஈடுபட்டு லண்டனில் இருக்கும் குற்றவாளி லலித்மோடிக்கு மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வணிக ரீதியில் தானும் தனது குடும்பமும் பெரும் ஆதயாம் அடைந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராராஜேவும் உதவியுள்ளனர். இதுகுறித்த முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, பாஜக முதல்வர் ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மருத்துவ மாணவர்கள் நுழைவுத்தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. வியாபம் ஊழல் என்று சொல்லப்படுகிற இதில் மருத்துவத்துறை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதற்காக மாணவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் உயர்மட்ட அளவில் லஞ்சமாக சென்றுள்ளது.

உயர்கல்வித்துறை, அரசுத்துறை போன்ற பல துறைகளிலும் இதுபோன்றே லஞ்சம், ஊழல்கள் நடைபெற்றுள்ளது. மிகப் பெரிய ஊழல் வலைப்பின்னல் இதன் பின்னனியில் இயங்கியுள்ளது. இதுகுறித்த ஆதரங்கள், மற்றும் தகவல் சேகரித்த சமூக ஆர்வலர்கள், சாட்சிகள், குற்றவாளிகள் என இதுவரை 46 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்துகூட பாஜக அரசு விசாரிக்க தயாரில்லை. முதல்வர் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும், குற்றவாளிகளை பாதுகாக்கவுமே, பாஜக அரசு முயற்சிக்கிறது. கடுமையான போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டுக்கு பின்னரே சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் பாஜகவின் ஊழல் சாதாரண ஊழல்கள் அல்ல கொலைகார ஊழல்கள் என பிரகாஷ்காரத் குற்றம் சாட்டினார். மேலும், அவர் கூறுகையில், காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் ஊழலில் எந்த வித்தியாசமும் இல்லை. மோடியின் ஓராண்டு பதவி காலத்திலேயே ஊழலில் சாதனை படைத்து பாஜக தன்னை அம்பலப்படுத்திக்கொண்டது. தேசநலனுக்கு சவாலாக உள்ள இந்த ஊழல்கள் அருகில் நெருங்க முடியாத நெருப்பாய் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் உள்ளது. ஊழலை எதிர்க்கிற அருகதை இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது.

எதிர்ப்பை மீறி செயல்படும் மோடி அரசு

மேலும், மோடி அரசின் இந்த 14 மாத காலத்தில் ஏழை எளிய உழைப்பாளிகள் மீது கடும் தாக்குதல்களை தொடுத்துள்ளது. தேச நலனில் அக்கறையில்லாமல் பகிங்கரமாக கார்ப்ரேட் நலனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கல்வி, சுகாதாரம், அங்கன்வாடி உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்படுகிறது. மேலும், மோடி தனது தேர்தல் வாக்குறுதியில் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் ஒரு தொழிற்சாலைகூட வரவில்லை. தொழிற்சாலைகளே வராமல் வேலையை எப்படி தரமுடியும் என்றார். இந்திய விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆறு மாத காலத்தில் விவசாயிகளின் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வெட்டிச்சுருக்கப்பட்டுள்ளது. மேலும், இருக்கிற மிச்ச நிலத்தையும் பிடுங்கிற வேலையை மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபடுகிறது. பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் துவங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்கள் எதிர்த்து வருகிறது. ஆனாலும், கடந்த அரசு விவசாயிகளுக்கு கொடுத்த பாதுகாப்பையும் கூட நீர்த்துப்போகச்செய்து, கார்ப்ரேட் நிறுவனங்கள், ரியல்எஸ்டேட்டுகள் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நிலத்தை எடுக்கலாம் என்கிற வகையில் இந்த சட்டத்தை திருத்தி மேலும் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மார்க்சிஸ்ட் கட்சி இடதுசாரி கட்சிகளோடு இனைந்து விவசாயிகள், ஜனநாயக சக்திகளை திரட்டி இதை முறியடிப்போம். நிலகையகப்படுத்தும் மசோதவை ஒருபோதும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார்.

விவசாயிகளை வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர்களை சீரழிக்கும் விதமாக இருக்கிற கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறிக்கும் விதமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது, தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கார்ப்ரேட் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயலை கண்டித்து செப் 2 ஆம்தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப்போராட்டத்தில், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில், இந்தியாவில் இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்களிப்போடு நடைபெற உள்ளது. மாற்றத்தை உருவாக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மோடியின் தொழிலாளர், விவசாயிகள் என மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆகஸ்டு 1 முதல் 14 வரை நாடு முழுவதும் கிராங்கள் துவங்கி மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட உள்ளது. இதன் மூலம் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தை நடத்த உள்ளது. இதுபோன்ற கோரிக்கைகாக நாம் மக்களை திரட்டுகிற இந்தநேரத்தில்தான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் வகுப்புவாத வெறியை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் வகுப்புவாத பதட்டத்தை உருவாக்கி கலவரத்தை தூண்டுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அதன் தன்மைக்கேற்ற வகையில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. சில இடங்களில் பசுவதையை தடுக்கிறோம் என்கிறது. வடமாநிலங்களில் லவ்ஜிகாத் என்கிற பெயரில் முஸ்லீம்கள் இந்து பெண்களை காதலித்து ஏமாற்றி திருமண செய்து கொள்கிறார்கள் என்கிறது. இதனையொட்டி சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதுபோன்ற சதியை முறியடித்து மக்கள் ஒற்றுமையும் மதநல்லிணக்கத்தையும் கட்டிக்காப்பாற்ற வேண்டியது நமது கடமையாக உள்ளது.

தமிழகத்திலேயே ஒரு மாற்றத்தை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி வலுவான முயற்சியை மேற்கொள்கிறது. இடதுசாரி ஜனநாயக சக்திகளை திரட்டி வலுவன மக்கள் போராட்டத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம், இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு கூட்டதில் விவாதிக்க உள்ளோம். தமிழகத்தில் மாற்றத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக மக்கள் எப்பொழுதும பேராதரவு தருவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்தகைய மாற்றத்தை உருவாக்குவோம் என்றார். இவரது ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழிபெயர்த்தார். முன்னதாக பேராசிரியர் சி.டி.குரியன் எழுதிய செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் என்ற பாரதி புத்தகலாயத்தின் நூலை பிரகாஷ்காரத் வெளியிட்டார். சத்தியமங்கலம் ஏ.எம்.காதர் நினைவு காடம்பூர் மலைமக்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஐ(எம்) அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈரோடு மாநகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Click to read English version

Check Also

மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறிவோம்; தமிழகத்தில் அதிமுக உள்பட பாஜகவின் கூட்டாளிகளுக்கு பாடம் ...