எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்திடுக!

குடியரசுத் தலைவருக்கு எட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம்!

புதுதில்லி, மே 11-

எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுடிதியுள்ளார்கள்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர், தேவபிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, லோக் தந்ரிக் ஜனதா தளம், பொதுச் செயலாளர், சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகியோர் கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடும் நாட்டு மக்களும் போராடிக்கொண்டிருக்கிற சமயத்தில், நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எங்களின் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதியிருக்கிறோம்.

உலகம் முழுவதும் இன்றைய தினம் தங்கள் நலன் மற்றும் தங்களை நேசிப்பவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயமும், நிச்சயமற்ற தன்மையையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது, மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி, கொரானா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் சமாளிப்பதில் மட்டுமே கவனம்செலுத்துவதாக இருந்திட வேண்டும்.

 “உங்கள் அரசாங்கத்தின்” முன்னுரிமை கொரானா வைரஸ் தொற்றால் கோடானு கோடிமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் அவர்களின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு உதவுவதாக இருந்திட வேண்டும்.  புலம் பெயர் தொழிலாளர்களில் பலர் தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, பசி-பஞ்சம்-பட்டினியுடன் சோர்வடைந்து பல ஆயிரம் மைல்கள் நடந்தே தங்கள் இல்லங்களை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணம் மற்றும் ரேஷன் பொருள்களை அளித்திட அநேகமாக எதுவும் செய்திடவில்லை.

உலகில் பல நாடுகள் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்திருக்கிறது. இந்தியாவிலும்கூட, உச்சநீதிமன்றம் சிறையிலிருப்பவர்களை பிணையிலோ அல்லது தண்டனைக் காலத்தைக் குறைத்தோ சிறைகளிலிருந்து விடுவித்து, சிறைகளில் கூட்டத்தைக் குறைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மும்பையில் ஆர்தர் ரோடு சிறையின் நிலைமை இத்தகைய ஆபத்துகளுக்கு ஒரு சாட்சியமாக இருக்கிறது. டாக்டர் ஜி.என்.சாய்பாபா போன்ற மிகவும் ஆழமான மருத்துவ நிலைமைகளில் இருக்கக்கூடிய ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் முறையான மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசு மேலும் கல்வியாளர்களையும், செயற்பாட்டாளர்களையும், பெண்களையும், மாணவர்களையும் சிறையில் அடைத்து அவர்களின் உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அளவில் இடர்மிகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

தில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் காவல்துறை, முழுமையாக அமைதியான முறையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட இயக்கத்தில் பங்கேற்றவர்களை, பெண்கள் உட்பட முக்கியமான செயற்பாட்டாளர்களை, அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துகொண்டிருக்கிறது. அவர்களை, தில்லியின் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை சம்பவங்களுடன் இணைத்து பொய்க்குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது ஜோடித்துக் கொண்டிருக்கிறது.  இத்துடன், விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரி, எண்ணற்ற மாணவர்களை, சிறப்புப் பிரிவு காவல்துறை அழைத்து, மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஜேஎன்யுவில் கயவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை வெறியாட்டங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களையே குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட வெளியார் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் ஆளும் கட்சியின் முக்கியமான தலைவர்கள் உட்பட மதவெறி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பல்வேறு வீடியோ பதிவுகள் நிறுவப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் அனைவரும் சுதந்திரமாக உலாவரும் அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு தில்லியின் நடைபெற்ற மத வெறி வன்முறை வெறியாட்டங்களின்போது, காவல்துறையினர் உடந்தையாக இருந்து, குண்டர் கும்பல் முஸ்லீம் சிறுபான்மையினர் பகுதிகளைத் தாக்கியது குறித்து வீடியோ காட்சிகள் தெளிவாக உள்ள நிலையிலும்கூட, தில்லிக் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்துகொண்டிருப்பதும், சிறுபான்மை சமூகத்தினரை மட்டும் விசாரணை செய்து கொண்டிருப்பதும், அவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ் மற்றும் பலர் எவ்விதமான சாட்சியமுமின்றி சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதும், நாட்டில் எப்படியெல்லாம் குடிரை உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமோர் அதிர்ச்சியளிக்கும் உதாரணமாகும்.

காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் மற்றும் பலரும் அடைப்புக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அதேபோன்று காஷ்மீரிகள் பலர் காஷ்மீரிலிருந்து வேறு பல மாநிலங்களில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.  

லல்லு பிரசாத் யாதவ், மிகவும் உடல்நலிவுற்றுள்ள நிலையிலும், அவரை சிறையில் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் அடைத்து வைத்திருப்பதைத் தொடரும் இந்த அரசாங்கத்தின் பழிவாங்கும் அணுகுமுறையும் கண்டிக்கத்தக்கதாகும்.

கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடும் நாட்டு மக்களும் ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டிய இத்தருணத்தில் இவ்வாறு இந்த அரசாங்கம் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராக பழிவாங்கும் போக்கைப் பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்வதன் மூலம் இந்த அரசாங்கம் தன் போக்கை மாற்றிக்கொள்ள நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...