எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட்டம் இன்று நடைபெறுகிறது

புதுதில்லி, மே 21

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை அன்று மாலை 3 மணியளவில் தலைநகர் புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கானொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதில் பங்கேற்கிறார்.

அப்போது அவர் கீழ்க்கண்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளுக்காக முன்வைக்கிறார். அதன்பின்னர் மத்திய அரசாங்கத்தின் உடனடி அமலாக்கத்திற்காக அவை கூட்டாக எழுப்பப்படும்.

கோரிக்கைகள்:

1.         வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொரானா வைரஸ் தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 7,500ரூபாய் நேரடி ரொக்க மாற்று (Direct Cash Transfer) செய்யப்பட வேண்டும்.

2.         தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் பத்து கிலோ உணவு தான்யங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

3.         புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இலவசமாக செய்து தரப்பட வேண்டும்.

4.         மத்திய அரசே ஒருதலைப்பட்சமாக மேற்கொண்டுள்ள அனைத்து முடிவுகளையும், குறிப்பாக தொழிலாளர் நலச்சட்டங்களை ரத்து செய்திருப்பதையும், திரும்பப் பெற வேண்டும்.

5.         அறுவடை செய்யப்பட்டு, விவசாயிகளிடம் தேங்கிக் கிடக்கும் விவசாய விளைபொருள்கள் அனைத்தையும் குறைந்தபட்ச ஆதார விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவிருக்கும் விவசாய உற்பத்திக் காலத்தில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் இதர இடுபொருட்களை அளித்திட வேண்டும்.

6.         கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கும் மாநில அரசாங்கங்களுக்கு, போதுமான நிதி ஒதுக்கிடு விடுவிக்கப்பட வேண்டும்.

7.         மத்திய அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுக்கருத்துக் கூறுவோர்களையும், அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் மதத்தின் அடிப்படையில் குறிவைத்துக் கைது செய்வதை நிறுத்திட வேண்டும்.

8.         அரசியல் கைதிகள், குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டு அம்மாநிலத்திற்கு உள்ளேயும் மற்றும் இதர மாநிலங்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும்  விடுதலை செய்திட வேண்டும்.

இவ்வாறு கோரிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...