என்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் – மத்திய, மாநில தலையிட வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்திற்கான ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த பிறகும் என்.எல்.சி. நிர்வாகம் நியாயமான ஊதிய உயர்வு அளித்திட மறுத்து வருகிறது.

சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக தொழிற்சங்கத் தலைவர்களை பழிவாங்குவதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடைக்க நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரை நிர்வாகம் வேலைநீக்கம் செய்துள்ளது. மேலும் பலரை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு நிர்வாகம் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களோடு இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நிர்வாகம் பிடிவாதமாக ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருவதால் என்.எல்.சி. நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும். இதனால் தமிழகத்திற்கும், அண்டை மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மத்திய அரசும், மாநில அரசும் மௌனம் சாதிப்பது சரியான அணுகுமுறையல்ல.

என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட மத்திய அரசும், மாநில அரசும் உரிய முறையில் தலையிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று ...