என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவிகித பங்கு தனியாருக்கு விற்பனை முடிவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்து ரூ.700 கோடி நிதி திரட்டுவது என்ற மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. என்.எல்.சி.யின் பல்வேறு தொழிற்சங்கங்களும் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே 2002 மற்றும் 2006ல் இதே போன்ற முடிவு மத்திய அரசால் எடுக்கப்பட்ட போது, கடும் எதிர்ப்பு உருவாகி, அந்த முடிவு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மீண்டும் மீண்டும் அதே முடிவை நோக்கிப் போவது என்பது, மத்திய அரசு நவீன தாராளமய பொருளாதார அணுகுமுறையில் அடி பிறழாமல் பயணிக்க விரும்புவதையே காட்டுகிறது. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐமுகூ அரசு, ஆட்சி செய்த 2004-09 காலத்தில், நவரத்னா பொது துறை நிறுவனப் பங்குகளை விற்க விடாமல் தடுக்க முடிந்தது.

ஆனால், இந்த ஆட்சிக் காலத்தில், பொது துறை நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் நிதி திரட்டுவதில் அரசு வேகம் காட்டி வருகிறது. கடந்த நிதி நிலை அறிக்கையிலே, பொது துறை நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் ரூ. 30,000/- கோடி வசூலிப்பது என்று குறிப்பிடப்பட்ட போதே, மார்க்சிஸ்ட் கட்சி அதை விமர்சித்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.  

கடந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் உட்பட பல பகுதியினர் குரல் கொடுத்துப் போராடிய பின்னணியிலேயே,  நெய்வேலியில் இந்தப் பொதுத் துறை நிறுவனம் உருவானது. இது பொதுத் துறையாக இருப்பதால் தான், குறைந்த விலையில் மின்சாரத்தை விற்பனை செய்ய முடிகிறது.

தனியாருக்குச் சாதகமாகக் கொள்கைகளும், விதி முறைகளும் வளைக்கப்பட்டு, கனிம வளங்கள் உட்பட நாட்டின் சொத்துக்களைத் தனியார் சூறையாடுவதற்கு அனுமதித்ததன் விளைவாக, கோடிக்கணக்கில் ஊழல் நடந்து கொண்டிருக்கிற காலம் இது. என்.எல்.சி.யின் பங்குகளில் ஒரு பகுதியை தனியாருக்கு விற்க முனையும் மத்தியஅரசின் முடிவை வன்மையாக கண்டிப்பதோடு இம்முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வலியுறுத்தி  அனைத்து பகுதி மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகிறது,  

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply