என்.எல்.சி. பங்கு விற்பனையை கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

25.05.2013

பிஜேபி தலைமையிலான ஆட்சிக் காலத்திலும் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை அந்நிய-இந்திய பெரு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-ஐஐ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளையும் விற்க வேண்டுமென ஓராண்டுக்கு முன்னதாகவே மத்திய அரசு செய்தது.

தொழிற்சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் வலுவான எதிர்ப்புகள் கிளம்பியதையொட்டி அப்போது பங்கு விற்பனை தள்ளிப்போடப்பட்டது. தற்போது என்.எல்.சி-யின் பங்குகளில் 5 சதவிகிதத்தை தனியாருக்கு விற்க வேண்டுமென மத்திய அரசாங்கம் நெய்வேலி நிர்வாகத்தை நிர்ப்பந்திப்பதாக செய்திகள் வருகின்றன. துவக்கத்தில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தொடங்கி தற்போது இலாபத்தில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனத்தின் பங்குகளை விற்றுக் கொண்டிருப்பது மத்தியில் ஆளும் அரசாங்கம் அந்நிய-இந்திய பெரு முதலாளிகள் நிர்ப்பந்தத்திற்கு பணிபுரிந்து செயலாற்றுவதையே வெளிப்படுத்துகிறது. மின் உற்பத்தி போன்ற கேந்திரமான துறையில் புதிய முதலீடுகளைச் செய்வதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள முதலீடுகளையும் அரசாங்கம் கைவிடுவது கட்டுப்படியான மின்சாரம் கிடைப்பதை தடுப்பதாகும். மேலும், என்.எல்.சி. போன்ற கேந்திர பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பது மெல்ல, மெல்ல இத்தகைய நிறுவனத்தை, பொதுச் சொத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையே இது. என்எல்சி நிறுவனத்தில் 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பதென மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

என்.எல்.சி நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டால் தமிழகம் தற்போது பெற்றுக் கொண்டிருக்கும் மின்சாரம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் தன்னுடைய முடிவை கைவிட வேண்டுமெனவும், எதிர்வரும் போர்டு கூட்டத்தில் என்எல்சி நிர்வாகம் இதுபற்றிய அஜெண்டாவில் பங்குகளை தனியாருக்கு விற்பதில்லை என்ற முடிவை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசாங்கத்தையும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் ஜனநாயக இயக்கங்களும் தொழிற்சங்க இயக்கங்களும் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply