என் கணவரைப் பார்க்க வாருங்கள்! அருண் ஜெட்லிக்கு ஒரு திறந்த மடல்

கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்க்க வரவேண்டும் என்று அவரது மனைவி மத்திய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கேரளாவிற்கு வருகிறார்.

அவர் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தன் கணவரைப் பார்க்க வர வேண்டும் என்று அவரது மனைவி ரம்யா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அக்கடித விவரம் வருமாறு:

“மாண்புமிகு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கு, கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், இரய்ஹோலி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் ரம்யா எழுதும் கடிதம்.

தாங்கள் கேரள மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளம் வர இருப்பதாக செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நான்,கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரய்ஹோலி கிராம சபைத் தலைவராக இருக்கின்றேன். என் கணவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.

என் குடும்பத்தில் என் கணவர் உட்பட நான், என் 12 வயது மகன் மற்றும் என் கணவரது வயதான பெற்றோர் உள்ளனர். என் கணவரின் சம்பாத்தியத்தில் நாங்கள் எங்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்து வந்தோம். என் கணவர் தன்னுடைய ஆட்டோவை நாயனார் சாலை என்னுமிடத்திலிருந்துதான் இயக்கி வந்தார். அந்த இடம் எங்கள் இல்லத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். அந்த இடத்திலிருந்து அவர் கடந்த 15 ஆண்டு காலமாக ஆட்டோ இயக்கி வருகிறார். அதனால் இப்பகுதி மக்கள் அனைவருக்கும் அவரை நன்கு தெரியும். அவர்களுடன் அவர் மிகவும் நல்லுறவை பேணி வந்தார். 2017 ஜூலை 3 அன்று பிற்பகல் 2 மணியளவில் பயணிகளின் வருகைக்காக அவர் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சிலர் அவரை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்துவந்து, அவர் எவ்விதத்திலும் தப்பிச் செல்ல முடியாதவாறு கத்திகளாலும், கோடாரிகளாலும் கொடூரமான ஆயுதங்களாலும் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.

இவை அனைத்தும் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. அவர் இரத்தச் சகதியுடன் சேறு படிந்திருந்த தரையில் சாய்ந்துவிட்டார். அந்த சமயத்தில் இக்கொடூர சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எவரொருவரும், தங்கள் உயிருக்குப் பயந்து, அவரைப் பாதுகாத்திட முன்வரவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்து ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சென்ற பின்னர், மக்கள் விரைந்தோடி வந்து, என் கணவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். பின்னர் அவர்களின் அறிவுரையின்படி கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். பேபி நினைவு மருத்துவமனையில் என் கணவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு இதுவரை ஏழு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இன்னும் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ள சூழ்நிலையிலும் அவர் உயிர் பிழைப்பாரா என்பது குறித்து உறுதியான வார்த்தைகள் எதையும் மருத்துவர்கள் சொல்ல முன்வரவில்லை. தாங்கள் என் கணவரை வந்து சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இனியாவது, இதுபோன்ற கொலை பாதகங்களை ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”

– ரம்யா

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...