எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் – உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துக

எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில்

காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு

உடனடியாக தேர்தல் நடத்துக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்தது தொடர்பாக   உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் மூன்றாவது நீதியரசர் சத்திய நாராயணன் இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் என்ற முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்திருப்பதன் மூலம் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத சிதைந்த (Truncated) சட்டப்பேரவையாக தமிழக சட்டப்பேரவை சுருங்கியுள்ளது; இது நீடிக்கக் கூடாது.

ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் அதனை ஒத்தி வைக்க வேண்டுமென தமிழக அரசு கோரியதும், அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதும் இயற்கையாக நடந்ததாக இத்தீர்ப்பின் பின்னணியில் தோன்றவில்லை. கடந்த இரண்டாண்டு காலமாக 18 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களும், பொதுமக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததாலும் அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததாலும்  அவதிப்படுவதுடன் இந்நிலை ஜனநாயகத்திற்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

ஆட்சியதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகள் மூலம் சொத்துக் குவிப்பதில் அதிமுக தலைமையில் ஏற்பட்ட பதவி சண்டையின் விளைவாக மக்களுக்கு இத்தகைய இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

மக்களது நம்பிக்கையை இழந்து விட்ட அதிமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. கூட்டுறவு தேர்தல்களையும் அலங்கோலமாக நடத்தியுள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களையும் மத்திய அரசின் துணையோடு ஒத்தி வைத்துவிட்டது. இதன் மூலம் மக்களை சந்திக்கும் திராணியற்ற அரசாக அதிமுக அரசு உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...