எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 66.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த மேலாண்மை பொன்னுச்சாமி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால், தன்னுடைய சுய கல்வியின் காரணமாக தமிழின் மிகச் சிறந்த சிறுகதை மற்றும் நாவல் ஆசிரியராக உயர்ந்தார்.

ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுநகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இவரது முதல் சிறுகதை கட்சியின் இலக்கிய ஏடான செம்மலரில் வெளியானது. இறுதிவரை கட்சி உறுப்பினராக இருந்த இவர், விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான மேலாண்மை பொன்னுச்சாமி, அந்த அமைப்பின் தலைவராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். செம்மலர் ஏட்டின் ஆசிரியர் குழுவிலும் நீண்ட காலம் இடம்பெற்றிருந்தார்.  கரிசல் காட்டு மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை  எளிய அதே நேரத்தில், கவித்துவமான மொழியில் தன்னுடைய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் அவர் பதிவு செய்துள்ளார். 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள்,  6 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பு என 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மின்சாரப் பூ என்னும் சிறுகதை தொகுப்புக்கு 2007 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தினத்தந்தி ஏடு வழங்கும் ஆதித்தனார் இலக்கிய விருது, வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் மாட்சிமைப் பரிசு, தமிழக அரசின் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர்  பெற்றுள்ளார்.

இவரது சிறுகதைகள் ஆனந்த விகடன் மற்றும் கல்கி உள்ளிட்ட ஏடுகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசைப் பெற்றுள்ளன. அன்னபாக்கியன், அன்னபாக்கியச் செல்வன், ஆமர்நாட்டான் உள்ளிட்ட புனைப் பெயர்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் என்று கம்பீரமாக அறிவித்துக் கொள்வதில் பெருமை கொண்டவர்.  அவரது மறைவு தமுஎகசவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முற்போக்கு இலக்கிய உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு என்றென்றும் அவரை நினைவு கூரச் செய்யும் என்பது உறுதி. கடைசி வரை கட்சியின் பெருமைமிக்க படைப்பாளியாக திகழ்ந்த அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...