ஏற்காடு இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெறச்செய்வீர்! வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

டிசம்பர் 4ல் நடைபெறவுள்ள ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்காடு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை வேண்டிக் கொள்கிறது.

மத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்தது. பெட்ரோல் – டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்தியது, உரத்திற்கான மானியங்களை குறைத்தது உள்ளிட்டு பல்வேறு மக்கள் விரோதக் கொள்கையினை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அமல்படுத்திய போது அதன் இணைபிரியாத கூட்டாளியாக இருந்து திமுக ஆதரித்து வந்தது. ஆதரவை விலக்கி கொண்டதாக அறிவித்தப் பிறகும் கூட உணவுப்பாதுகாப்பு மசோதா, வங்கிகள் சீர்திருத்த மசோதா, பென்சன் நிதி மசோதா ஆகியவற்றை ஆதரித்து வாக்களித்தன் மூலம் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகள் அனைத்தையும் ஆதரிப்பது என்கிற நிலைபாட்டில் திமுக உறுதியாக இருந்து வருகிறது.

அதேசமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநில உரிமைகளில் கை வைக்கும் மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சித்தும்; போராடியும் வந்திருக்கிறது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

மக்கள் விரோத, ஊழல் மலிந்த காங்கிரஸ் கட்சிக்கும், அதன் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்திற்கும் முழுமையாக ஆதரவு அளித்திட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பாடம் புகட்டும் வகையிலும் தமிழக அரசின் போராட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் முறையிலும் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் அஇஅதிமுக வேட்பாளர் திருமதி. பி. சரோஜா அவர்களை ஆதரித்து அமோகமாக வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்காடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply