ஏழை எளிய மக்களுக்கு உதவாத பட்ஜெட்!

மத்திய அரசின் 2013-14 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சாதாரண மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அமையவில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகப்பெரும் துயரங்களை சந்தித்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த உருப்படியான நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை. 2012-13 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு அந்த ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மொத்த செலவினம் 4 சதவிகிதம் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. இது பொதுவான (சமூக நலத் திட்டங்களுக்கான) செலவினம் சுருங்கிப்போவதை சுட்டிக் காட்டுகிறது.
 
விவசாய நெருக்கடிக்கு தீர்வு காண அடிப்படையான தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை. ரூபாய் 7 லட்சம் கோடி விவசாயக் கடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பெருமளவிலான விவசாயக் கடன் பணக்காரர்களுக்கும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கிடைத்ததே தவிர, சாதாரண ஏழை எளிய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
 
சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டோடு ஒப்பிடும் போது மானியங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 26,571/- கோடி குறைந்திருக்கிறது. உணவுக்கான மானியமும் மிகக் குறைந்த அளவில் தான் உயர்த்தப்பட்டிருக்கிறது.
 
பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டோடு ஒப்பிடும் போது ரூ.30,000/- கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் மீது கடுமையான சுமைகளை ஏற்றிடும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான கூடுதல் ஒடுக்கீடு எதுவும் இல்லை; பொருளாதாரம் கீழிறக்கத்தால் வேலையின்மை அதிகமாகும் பின்னணியில் இதைக் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது.
 
ரூ. 55,814/- கோடி அளவிற்கு பொதுத்துறை பங்குகளை விற்றுவிடும் அபாயகரமான முடிவும் வெளியிடப்பட்டிருக்கிறது. பணவீக்க அடிப்படையில் பார்த்தால் கல்வி-சுகாதார நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.
 
தலித் மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மிகக் குறைவானதாகும். தலித்-பழங்குடி மக்கள் தொகைக்கேற்ப நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை மத்திய அரசு தொடர்ந்து மீறுவது சமூக அநீதியாகும். சிறுபான்மை மக்களின் முன்னேற்றம், பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இவற்றிற்கு நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவானதாகும்.
 
பெரும் தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட செல்வந்தர்களுக்கு வரி ஏய்ப்புத் தடுப்பு விதிகள் அமல்படுத்துவதை 2 ஆண்டுகள் தள்ளி வைத்துள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். நிதிநிலைப் பற்றாக்குறையை சமாளிக்க பெரும் செல்வந்தர்களிடமிருந்து கூடுதல் நிதி திரட்டுவது என்ற அணுகுமுறையை கடைபிடிக்க அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் திட்டமிட்டதை விட குறைந்த அளவிலான (5.1 சதவிகிதம்) பொருளாதார வளர்ச்சியே இருந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு உருப்படியான நடவடிக்கைகள் இல்லாமல் 2013-14-க்கு 6.7 சதவிகிதம் வளர்ச்சி இலக்கு என மதிப்பீடாக அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. 
 
மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஏழை-எளிய மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இல்லை என்பதோடு அவர்கள் மீதான சுமைகளை உயர்த்தவே வழி வகுக்கும். மத்திய அரசின் இத்தகைய தவறான கொள்கைகளை எதிர்த்துப் போராட முன்வருமாறு அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply