ஐநா சபை வாக்கெடுப்பு : இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் துரோகம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் !

இலங்கையில் நீண்டகாலமாகவும், இறுதிக்கட்ட போரின் போதும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 11 நாடுகளும் வாக்களித்து, தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பில், நடுநிலை வகிப்பதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, இலங்கை அரசின் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்திய அரசு வாக்களித்திருக்க வேண்டும்.

சொல்லப்போனால், இலங்கை தமிழர்கள் நலன் காக்கும் விதத்தில், இப்படியான தீர்மானத்தை முன்னெடுக்கிற பணியையே இந்தியாதான் செய்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம், ராஜபட்ச அரசு இழைத்த கொடுமைகளுக்கு ஆதரவான நிலையையே வெளிப்படுத்தியிருக்கிறது.

சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தும் விதத்தில், இந்திய அரசின் நிலைப்பாடு அமையவில்லை. ஏற்கனவே ஐ.நா. மன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்தும் இலங்கை அரசு விலகிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு இந்திய அரசு ஆதரவு காட்டுவது பெரும் தவறாகும்.

இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த நிலைப்பாட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...