ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக மீது மக்களுக்குள்ள கோபத்தைப் பிரதிபலிக்கிறது…

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கார் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருப்பது, மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியுள்ள மோடி அரசாங்கம் மற்றும் பாஜக அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் இவற்றிகெதிராக எந்த அளவிற்கு அதிருப்தியும் கோபமும் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு, மிகத் தெளிவான அறிகுறியாகும். இந்த முடிவுகள், பாஜகவை தேர்தலில் வெல்லவே முடியாது என்று கூறிவந்த கதையைத் தகர்த்தெறிந்திருக்கிறது.

பாஜக அரசாங்கத்தின் கொள்கைகள், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மக்களை மேலும் மிகவும் ஆழமான அளவிற்கு வறுமையில் தள்ளக்கூடிய விதத்தில்தான் இருந்தது. எனவே இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, நாட்டில் மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்திடும் முயற்சிகளில் அது இறங்கி இருந்தது. முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளின் மீதான தாக்கதல்களும், மக்களைப் பிளவுபடுத்திடும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வன்முறை வெறியாட்டங்களும் வெறித்தனமான முறையில் வெறுப்புச் சூழ்நிலையை உருவாக்கி வந்ததும் வெற்றி பெறவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவை மிகவும் கீழே தள்ளி பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. மிசோரத்தில், மிசோரம் தேசிய முன்னணி அங்கிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தைப் புறந்தள்ளிவிட்டு தீர்மானகரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

முந்தைய பாஜக ஆண்ட மாநிலங்களில் அமையவிருக்கும் புதிய அரசாங்கங்கள், மக்களின் தீர்ப்பினை மதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திடும் விதத்திலும், துன்ப துயரங்களைக் குறைத்திடும் விதத்திலும் செயல்பட வேண்டும். மேலும் இந்த அரசாங்கங்கள், பாஜக-வின் மதவெறி அரசியலால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் சரிசெய்து, மீளவும் அவற்றை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் துங்கர்கார் மற்றும் பத்ரா தொகுதிகளில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...