ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வீடு மீதான தாக்குதலுக்கு கண்டனம்

தீர்மானம்-2

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
கார்த்திகேயன் பாண்டியன் வீடு மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இந்தியா என்பது ஜனநாயக, மதச்சார்பற்ற, கூட்டாட்சித் தன்மை கொண்ட குடியரசு ஆகும். ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில அரசுகளின் உரிமைகள் காலில் போட்டு மிதக்கப்படுகின்றன. கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மோடி அரசு அத்துமீறி தலையிடுகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை புகுத்துகிறது.

தமிழகம், புதுவை உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ்காரர்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் வரம்பு மீறி தலையிடுகின்றனர்.

திரிபுரா மாநில முதல்வர் தோழர் மாணிக் சர்க்காரின் குடியரசு தின உரையை வானொலியில் ஒலிபரப்ப மோடி அரசு மறுத்தது.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றும் இந்திய அரசுப்பணி அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் வீட்டின் மீது பாஜகவைச் சேரந்த வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் மதில் சுவரை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தியதோடு சாணத்தை கரைத்து ஊற்றியுள்ளனர். பாஜக கொடியுடன் சென்று இந்த அநாகரீகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கார்த்திகேயன் பாண்டியன் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர். இவர் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் திறம்பட பணியாற்றுவதால் இன வெறியை தூண்டும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேசியக் கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக தேர்தல் ஆதாயத்துக்காக குறுகிய மத இன சாதி வெறியைத் தூண்டிவிடுவது விபரீதங்களுக்கே வழிவகுக்கும். இந்தப்போக்கை பாஜக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வீடு மீது தக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது தமிழ் மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர்: தோழர் மதுக்கூர் ராமலிங்கம்

வழிமொழிபவர்: தோழர். எம். செந்தில், வாலிபர் மாநில மையம்

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...