ஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்

ஒக்கி புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அமைச்சர்கள் ஒருமாத சம்பளத்தை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் இந்த துயரத்தை துடைக்க அனைவரும் நிதிஉதவி செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். காணாமல் போனவர்களை தேடும் பணி கடலில் தொடர்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது: உயிரிழந்தோருக்கு பத்து லட்சம் ரூபாய் அரசும், பத்து லட்சம் ரூபாய் மீன் வளத்துறையும், மீன் தொழிலாளர் நலவாரியமும் வழங்கும்.
 
இந்த 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒரே தவணையில் வழங்கப்படும். தேசிய துயர்துடைப்பு நிதியிலிருந்து ரூ.1843 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் தேடுதல் பணி தொடர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டபோது சாதகமான பதிலளித்துள்ளார். மீன் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். வாரியத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்க தாமதமானால் அதற்காக காத்திருக்காமல் வாரியத்தின் நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும். நிதியை பெறுவதற்காக யாரும் அரசு அலுவலகங்களை ஏறி இறங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மரணமடைந்தவர்களில் ஏராளமானோரை அடையாளம் காண முடியவில்லை. டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அவர்களது அடையாளம் காணப்படும்.
 
படுகாயம் அடைந்து தொடர்ந்து தொழில் செய்ய முடியாதவர்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், அங்கிருந்துவீடு திரும்பியோருக்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். படகுகளை இழந்தவர்களுக்கும், பழுதடைந்துள்ளவர்களுக்கும் வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகளை இழந்தோருக்கும் அதற்கேற்ற இழப்பீடு வழங்கப்படும். இறந்தவர்களின் குழந்தைகளது கல்விக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
கடலில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படகுகளில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்படும்.முதலமைச்சரின் துயர்துடைப்பு நிதிக்கு அமைச்சர்கள் ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர். புயலில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ அனைத்து விதமான உதவிகளும் அரசு அளிக்கும். பாதிக்கப்பட்டோருக்கு உதவ அனைவரும் தயாராக வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார். தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க தயாராக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...