ஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஒக்கி புயல் பாதிப்புகளுக்குப் போதிய நிவாரண உதவிகளை மத்திய அரசு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒக்கி புயல்ஒக்கி புயல், கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் சொல்லொண்ணா சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாகவும், சுமார் நூறு பேர் காணாமல் போய்விட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. மீனவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகள், எந்திரப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் சேதாரமாகியுள்ளன. தமிழ்நாட்டில் முப்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணவில்லை என்றும் செய்திகள் வந்திருக்கின்றன.

வீடுகள், பயிர்கள் மற்றும் உடைமை களுக்கும் மிகப்பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காணாமல் போனவர்கள் எண்ணிக்கை மிகவும் ஏராளமாக இருக்கும் உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மத்திய அரசு, அவர்களைத் தேடும் பணியைத் தொடர்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும், அவர்களை மேலும் சிலநாட்களுக்கு, கடலில் கப்பற்படை, விமானப்படை மற்றும் கடற்கரைக் காவல்படையினரின் மூலமாக தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றிட வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழுமம் (National Disaster Management Authority), இதுபோன்று புயல் உருவாகும் சமயங்களில் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குத் தெரிவிக்கக் கூடிய விதத்தில் புதுப்பிக்கப்பட வேண்டியதும் இன்றைய தேதிகளில் மிகவும் அவசியமானதாகும்.

கேரள மாநில அரசாங்கம் ஒக்கி புயலை கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து 1843 கோடி ரூபாய் உடனடியாக உதவிட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. இதைப் போலவே குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

முகமது அப்ரசல் கொலைக்குக் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமாந்த் என்னுமிடத்தில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி, மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. அப்ரசல் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்திருந்தார். இக்கொலையைச் செய்தவன் சம்புலால் ரெகார் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான். அவன் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

நாட்டில் வெறுப்பு அரசியல் உருவாக்கியுள்ள சூழலும், இந்துத்துவா வெறியர்கள் நாடு முழுதும் முஸ்லீம் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதும் தொடர்கின்றன. மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் பாஜக அரசா ங்கங்கள் இத்தகைய வெறுப்பு அரசியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.அக்லாக்கைக் கொன்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனமான நேஷனல் தெர்மால் பவர் கார்ப்பரேஷனில் வேலைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய கொலைகாரர்களை பாஜக எம்பிக்கள் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர். தன்னைத் தாக்கியவர்கள் யார் என்று பெயர் குறிப்பிட்டு, தன்னுடைய மரண வாக்குமூலத்தில் பெஹ்லுகான் கூறியிருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாறாக தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம், இத்தகைய பசுப் பாதுகாப்புக்குழு, மற்றும் ஒழுக்க சீலக் காவல் படைகள் (‘moral policing’) என்ற பெயர்களில் செயல்படும் தனியார் சேனைகளுக்குத் தடை விதித்து சட்டமியற்றிட வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு மீளவும் வலியுறுத்திக் கோருகிறது.

நிதித் தீர்மானம் மற்றும் வைப்புக் காப்பீடு சட்ட முன்வடிவு (FRDI Bill)

மோடி அரசாங்கம், நிதித் தீர்மானம் மற்றும் வைப்புக் காப்பீடு சட்ட முன்வடிவினை (FRDI Bill) வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே அவசர அவசரமாகக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இது, கோடிக்கணக்கான சாமானிய மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புத் தொகைகளை வங்கிகளில் சேமித்து வைத்திருப்பதை கபளீகரம் செய்வதற்கான அப்பட்டமான தாக்குதலாகும். இது, வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் வங்கி சேமிப்பாளர்களின் வயிற்றில் அடித்து தங்கள் நிலையை சரிப்படுத்திக் கொள்வதற்கு உதவுவதற்காகவே கொண்டு வரப்படுகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களை மிகப்பெரிய அளவில் வாரிக்கொடுத்துவிட்டு அவற்றைத் திரும்ப வசூலித்திட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், அதனால் ஏற்பட்டுள்ள இழப்பை கோடிக்கணக்கான சாமானிய மக்களின் சேமிப்புத் தொகைகளிலிருந்து சரிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்தச் சட்டமுன்வடிவு சர்வதேச நிதி மூலதனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டி ருக்கிறது. 2008 இல் ஏற்பட்டதுபோல வங்கிகளுக்கும் நிதித்துறை நிறுவனங்களுக்கும் எதிர்காலத்தில் உலக நிதி நெருக்கடி ஏதேனும் ஏற்பட்டால், அவற்றைக் காப்பாற்றிடவே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் திவாலாகிப் போன வங்கிகளையும் நிதித்துறை நிறுவனங்களையும் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கங்கள் அவற்றின் திவாலாகிப்போன நிலைமைகளை தாங்கள் திவாலாகிப் போன நிலைமைகளாக மாற்றிக் கொண்டன. இது உலக முதலாளித்துவத்திற்கு புதியதொரு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இது உலகப் பொருளாதாரக் கொள்ளை நோயாகத் தொடர்கிறது. ஒருவேளை வங்கிகள் நிலைகுலைந்து போனால், இந்த நிதித் தீர்மானம் மற்றும் வைப்புக் காப்பீடு சட்டமுன்வடிவு , அவ்வங்கிகளைக் காப்பாற்றிட அது சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ள மூன்று நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றை எடுப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது, இந்த வங்கிகளை வேறு ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்திற்கு விற்பது, (அது அந்நிய கார்ப்பரேட் நிறுவங்களாகக் கூட இருக்கும்), வங்கிகளை இணைப்பது, (பாஜக அரசாங்கம் தற்போது இதனை மேற்கொண்டு வருகிறது), அல்லது வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்களின் தொகைகள், சேமிப்பாளர்களுக்குத் தரப்படாமல் தள்ளுபடி (‘bail in’) செய்யப்படும்.

இந்தச் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக அமலுக்கு வருமானால், பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி தன் பணிகளை மேற்பார்வை, முறைப்படுத்தல் மற்றும் நிதிக் கொள்கை ஆகியவற்றிலிருந்து, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதற்கு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும். இதன் பொருள், வங்கிகளிடம் அபரிமிதமாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கிற கார்ப்பரேட்டுகளும், அதன்காரணமாக வங்கிகளும் நிலைகுலைந்து போவதைத் தடுப்பதற்காக, சாமானிய சேமிப்பாளர்களின் நலன்கள் உண்மையில் காவு கொடுக்கப்படும்.

இச்சட்டமுன்வடிவு சட்டமாக்கப்பட்டுவிட்டால் வங்கி சேமிப்பாளர்களின் சம்மதம் இல்லாமலேயே அவர்களின் பணம் மற்றும் உடைமைகளை வங்கிகள் தங்கள் இஷ்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றன. சேமிப்பாளர்களின் பணத்தைப் பாதுகாத்திட எந்த உத்தரவாதமும் கிடையாது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டமுன்வடிவை நடப்பு வடிவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்திடும். வங்கிகளில் சேமிப்புகளை வைத்திருக்கக் கூடிய பல கோடிக்கணக்கான சேமிப்பாளர்களின் நலன்கள்ஆபத்திற்குள்ளாவதிலிருந்து தடுப்பதற்காக இதர அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் சிபிஎம் கோரும்.

22ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு, மாநில மாநாடுகள் அட்டவணையையும், அவற்றில் பங்கேற்கும் மத்தியக் குழுவின் தலைவர்களையும் இறுதிப்படுத்தி இருக்கிறது. 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரையிலும் ஹைதராபாத்தில் 22ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்குமுன் 25 மாநிலக்குழுக்களும் தங்கள் மாநாடுகளை நடத்திடும். 22ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான வரைவு அரசியல் அறிக்கையை அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. இந்த விவாதங்கள் 2018 ஜனவரி 19 முதல் 21 வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள மத்தியக்குழு கூட்டத்தின் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும்.

தமிழில்: ச.வீரமணி

English version

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...