ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க!

கழிவுகளை அகற்றி தொற்றுநோய் பரவலை தடுத்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை, வெள்ளம் ஓரளவு ஓய்ந்து, தட்டுத் தடுமாறி, இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழல் இது. 300க்கும் மேற்பட்டவர்கள் மரணம், உடமைகள் நாசம், பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடிழப்பு, வருமானம் இழப்பு, உடல்நிலை பாதிப்பு, பட்டினிக் கொடுமை என்ற சங்கிலி தொடரான சேதாரங்கள்; இதற்கு மத்தியில் சாதி, மதம்,மொழியைக் கடந்து நீண்ட உதவிக் கரங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பல்வேறு துறை ஊழியர்கள், சில அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது. பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் நலக் கூட்டியக்க தோழர்களின் களப்பணி குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேரிழப்பை ஈடுகட்ட இன்னும் இன்னும் உதவிகள் தேவைப்படுகின்றன. எந்த ஒரு தனி அமைப்பு மட்டுமே சமாளிக்க முடியாத பாதிப்பு, பேரிடர் என்பது உண்மை தான் என்றாலும், மாநில அரசின் சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் சொல்லொணா கோபத்தை உருவாக்கியிருகின்றன. அமைப்புகள், தனி நபர்களின் நிவாரண பொருட்களை வழி மறித்து முதலமைச்சரின் படத்துடன் கூடிய ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக ஒட்டுவது, அதற்காக நிவாரணப் பணிகளைத் தாமதப்படுத்தி பொருட்களை வீணாக்குவது, சினிமா பட பாணி சுவரொட்டியைப் பின்பற்றி முதல்வர் தனி ஒரு மனிதராகத் தமிழகத்தைக் காத்ததான மலிவு வகை விளம்பரத்தில் ஈடுபடுவது போன்றவை கடும் அதிருப்தியை விளைவித்திருக்கின்றன. ராணுவத்திற்கு மீட்பு பணிகள் குறித்து உடனடி தகவல் கொடுக்காமல் காக்க வைத்ததாகவும், நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலை நிறுத்தி வைத்திருப்பதாகவும், கர்நாடக அரசின் நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை, அம்மாவின் ஆணைப்படி என்று துவங்கிப் பேசுவது மக்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. ஜெயா டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தால், இப்படி ஒரு பேரிடர் நடந்த சுவடே தெரியவில்லை. பேரிடரின் போது முதல்வர் பேரமைதி காப்பது எப்படித் தகும்? இத்தனைக்கும் மத்தியில் இதர கடைகள் மூடிக்கிடக்கும் போது, டாஸ்மாக் மது பானக் கடைகள் மட்டும் அடாத வெள்ளத்திலும் இயங்குவது மக்களின் இடர்ப்பாடுகளில் லாபம் ஈட்டும் மோசமான நடவடிக்கையாகும்.

ஒரு மாத தொலைபேசி, மின்கட்டணத்தை ரத்து செய்க!

தற்போதும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் காத்துக் கிடக்கின்றன. தண்ணீரும் கழிவு நீரும் தேங்கிக் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்தல், சுகாதார கேடுகளைத் தடுக்க ஏற்பாடுகள், மருத்துவ முகாம்கள், தடுப்பூசி போடுதல், மின் இணைப்பைத் திரும்ப அளித்தல் போன்றவை செய்யப்பட வேண்டும். அடுப்பு, எரிபொருள், மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பாய், போர்வை, நிதி ஆகியவை அடங்கிய ஒரு பை, ரேஷன் கடைகள் மூலம் கொடுக்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குறைந்தது ஒரு மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு/தொலை பேசி நிர்வாகத்திடம் பேசி, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் உட்பட ஒரு மாத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சர்வ கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளை முடுக்கி விட வேண்டும். மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற வேண்டும்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் சில இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எவ்வித உதவியும் கிடைக்காத இடங்களும் இருக்கின்றன. அரசு நிர்வாகம், பல தரப்பிலிருந்து வரும் உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டும், அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இயல்பு நிலை திரும்பும் வரை நிவாரணப் பணிகளையும், சாத்தியமான உதவிகளையும் தொடர்ந்து செய்திட வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...