ஒளிக்கீற்றாய் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை

திமுக தலைவர் கருணாநிதி 94வது பிறந்தநாள், அவரது தொடர்ச்சியான சட்டமன்றப் பணிகளின் 60வது ஆண்டு ஆகிய இரண்டும் இணைந்த விழா சனிக்கிழமையன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் நிரம்பி வழிய நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை:-

கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் மட்டுமல்ல, நானறிந்தவரையில் எந்த பத்திரிக்கையின் ஆசிரியரும் 75 ஆண்டுகளாக தினமும் ஆசிரியர் பக்கம் (எடிட்டோரியல்) எழுதியவர் இல்லை.

அவரிடம் பழகியுள்ளேன். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் இயல்புடையவர். சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார் என்றால் அரசியல் சிக்கல் எதையும் அவர் எதிர்கொள்ளவில்லை என்று பொருள். எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொருள்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு என்னை அழைத்தார். நானும் வந்தேன் ஆனால் கோவை விமானத்தை தவறவிட்டுவிட்டேன். ஹெலிகாப்டர் அனுப்பி அழைத்துச் சென்றார். நான் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவன் அல்ல. ஏன் இப்படி கவனமெடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் ‘தமிழ் மொழி தமிழர்களுடையது மட்டுமல்ல, அது மனித குலத்துக்கான உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியது. அது உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.’ என்றார். அது கலைஞரின் உள்ளக் கிடக்கையாகும்.

தமிழ் இலக்கியம், கலை, பண்பாட்டிற்கு கலைஞர் செலுத்திய பங்களிப்பு தனித்துவமானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற கடமைக்காக, இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க நான் இங்கே வந்துள்ளேன்.

கலைஞருக்கு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. அதனை இந்தியாவுக்கு அளித்துள்ளார். ஆம், சில சமயங்களில் அவரோடு முரண்பட்டுள்ளோம். ஆனால் எதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 4 அடிப்படைகளில் நின்றே முரண்பட்டுளொம்.

அவை,

  1. மதச் சார்பற்ற ஜனநாயகம்
  2. சமூக நீதி
  3. பொருளாதார சுய சார்பு மற்றும்
  4. கூட்டாட்சி

மேற்கண்ட 4 கொள்கைகள் வழி கலைஞரும் நின்றுள்ளார். அதில் சமரசமில்லை. இந்தியாவின் எதிர்காலத்தின் அடிப்படையும் அவைதான். எங்களுக்குள் இவ்விசயங்களில் முரண் எழுந்திருக்கிறது. உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையம் (தவறுதலாக சேலம் ஸ்டீல் என உச்சரித்துள்ளார்) தனியார் மய முயற்சிகள் நடந்தபோது, திமுக மத்திய அரசில் பங்குபெற்றிருந்தது. களத்தில் தொழிற்சங்கங்கள் போராடின, மத்திய அரசில் இருந்து கலைஞர் தனியார் மயத்தினை உறுதியாக எதிர்த்தார்.

இன்று, முன் எப்போதையும் விட கலைஞரின் விரிந்த பார்வையும், பங்களிப்பும் தேவைப்படுகின்ற காலம் எழுந்திருக்கிறது. இந்த கூட்டம் தொடங்கும்போது நம் பந்தலுக்கு மேலே கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. அதற்கு அப்பால் ஒருவெள்ளி தெரிகிறது. அது கொடுக்கும் வெளிச்சம், கருமேகங்களை அகற்றி வீழ்த்தும். அத்தகைய வெள்ளி முளைக்க வேண்டுமானால், இந்தியாவின் மீது நேசம் கொண்டவர்கள் ஒன்றாக நின்று, இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.

இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐஐடி மாணவரை சந்தித்தேன். மாட்டுக்கறி சாப்பிடுவதா என்ற பிரச்சனையில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவர். மத, ஆர்.எஸ்.எஸ் அரசியல் தமிழகத்தில் எப்படி வந்தது?. யார் என்ன சாப்பிட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்பதையெல்லாம் தனியார் பட்டாளங்கள் முடிவு செய்கின்றனர். கலாச்சாரக் காவல், ரோமியோ எதிர்ப்பு என்றெல்லாம் செயல்படுகின்றனர். அந்த பட்டாளங்கள்தான் இந்தியாவை ஆதிக்கம் செய்கின்றன.

இன்று ஊழலற்ற அரசு நடப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா? அரசு பொதுத் துறை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு, மோடி அரசின் 3 ஆண்டுகளைக் கொண்டாடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழலும், சலுகை சார் முதலாளித்துவமும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஒரு பக்கம் பார்க்கிறோம். மறுபக்கம், 2 கோடி வேலை வாய்ப்புகள் எனற வாக்குறுதிக்கு மாறாக இந்தியர்கள் இடையே வேலை இழப்பு அதிகரிக்கிறது. தொழில் துறை தேக்கமடைந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஊரக வேலைவாய்ப்பின் கீழ் உழைத்தவர்களுக்கு கூலி கொடுக்கப்படுவதில்லை என்று அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. 12 ஆயிரம் விவசாயிகள் ஒவ்வோராண்டும் தற்கொலை செய்வதாக அரசே தெரிவிக்கிறது.

நமக்கு உணவளிப்போர் சாகிறார்கள். தமிழக விவசாயிகள் சென்னை வந்து போராடினார்கள். வறட்சி விவசாயத்தை சிதைக்கிறது. விவசாயிகளுக்கோ, இளைஞர்களுக்கோ நிவாரணம் ஏதுமில்லை. ஆனால், வகுப்புவாத பதட்டம் தூண்டப்பட்டு , ஒரு கட்சியின் அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவின் ஒருமைப்பாடும், அமைதியும் களவாடப்படுகிறது.

அது நம் முன் எழுந்திருக்கும் சவாலாகும். அந்த சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட்டு, மேற்சொன்ன கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

அரசியல் என்பது ஏட்டுக் கணக்கு அல்ல. 2+2 என்பது எளிய கணக்கீட்டில் 4 ஆகலாம். அரசியலில் அது 22 ஆகலாம். மக்கள் போராட்டங்களின் மூலம் நாம் அரசியலின் திசை வழியை மாற்றியமைத்திடலாம். அதுதான் இப்போது தேவைப்படும் மாற்றமாகும்.

கலைஞரோடு 1996 ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அடுத்த பிரதமரை தீர்மானிக்க, தில்லி ஆந்திரா பவனில் கூடியிருந்தோம். அவரின் நகைச்சுவையை அறிந்தேன். அந்த நகைச்சுவை எப்போதும் தேவை.

கலைஞர் என்னிடம் உன் மகளின் பெயர் என்ன என்று கேட்டார். அகிலா என்றேன். கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாராவது தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளீர்களா. நான் என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளேன் என்றார் என்னிடம். அவர் அண்ணாவையும், பெரியாரையும் சந்தித்திருக்காமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்டாகியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அது வேறு விசயம்.

ஆனால், திரு ஸ்டாலினுக்கு பெயர் வைக்கப்பட்ட போது, உலகம் பாசிசத்தை எதிர்த்து உலகப் போரை நடத்தி வந்தது. பெர்லினில் பறந்துகொண்டிருந்த நாஜி கொடியை அகற்றி உலகிற்கு பாசிசத்தின் வீழ்ச்சியை அறிவித்தது செங்கொடியாகும். தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவித் செம்படையே அதைச் செய்தது. எனவே ஸ்டாலின் என்ற பெயருக்குப் பின்னே பல பொறுப்புகள் உள்ளன.

இன்றைய நிலையில், நாம் அந்த கடமையை நிறைவேற்ற… முதலில் மக்களிடம் செல்ல வேண்டும். ஒன்றுபட்டு போராட்டங்கள் நடத்தி. அதன் மூலம் மக்கள் ஒற்றுமையை, அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

நாம் அனைவரும், நம் முன் உள்ள சவாலை எதிர்கொண்டு, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை இன்று இருப்பதிலிருந்து, சிறப்பானதாக மாற்ற உழைக்க வேண்டும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...