ஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்!

சு.பொ.அகத்தியலிங்கம்

சில்க் சாலை வழிப் பயணம்
அது சிலுசிலுக்கும் பயணமல்ல
காலும் கையுமே வாகனமாய்
காடு, மலை, கடல் தாண்டி
பயணித்த முஹாஜிர்களிடையே
கம்யூனிச நெருப்பின் பொறி பற்றியது
கால்கள் சிவப்பு தேசம் நோக்கி
வேகமெடுத்து விரைந்தன…

17 அக்டோபர் 1919.
தாஷ்கண்டின் வெடவெடக்கும் குளிரில்
அன்று பொந்திடை அவரிட்ட அக்னி நாற்று
‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ என்றானது…
ஆண்டுகள் நூறாகிறது – அந்த
நெருப்பின் நாட்கள்
நீறு பூத்து எம் நெஞ்சில் கிடக்கிறது.

பிறந்த குழந்தை இன்னும்
புரண்டுகூட படுக்கவில்லை
ஏகாதிபத்திய மூக்கு வியர்த்தது
அடுத்தடுத்து ஏவியது சதி வழக்குகளை!
தாஷ்கண்ட் –பெஷவார் சதி வழக்கு
மீரட் சதி வழக்கு
கான்பூர் சதி வழக்கு!

உள்ளூர் சிறை முதல்
அந்தமான் சிறை வரை  
ஒவ்வொரு சிறைச் சுவரையும்
கேட்டுப் பாருங்கள்!!
கம்யூனிஸ்டுகளின் லட்சிய உறுதியை
சொல்லிக் கண்கலங்கும்!!!

தூக்கு மேடைகளும், துப்பாக்கி குண்டுகளும்
குண்டாந்தடிகளும், கொடூர சட்டங்களும்
கம்யூனிஸ்டுகள் நெஞ்சைப் பிளந்தும்
இரக்கமின்றி உயிர் குடித்தும்
ஓயாத கம்யூனிஸ்ட் லட்சிய பயணத்தை
பொய்களும், அவதூறுகளும்
புனைந்த வஞ்சகக் கதைகளுமா
வீழ்த்திடும்? சொல்! தோழா!

தொப்புள் கொடி அறுக்கும் முன் தொடங்கி
இந்த நொடிவரை ஆம் இந்த நொடி வரை
நெருப்பாற்றில் எதிர்நீச்சல்!
எம் வரலாறும் அதுதான் – இனி
எழுதப்போகும் வரலாறும் அதுதான்!!

குறிப்பு : சில்க் ரோடு என்றழைக்கப்பட்ட ஆப்கான் வழி கால்நடையாக துருக்கி நோக்கி சென்ற முஹாஜிர் என்ற கிலாபத் தொண்டர்கள் கம்யூனிச கருத்தால் கவரப்பட்டு மாஸ்கோ நோக்கி பயணப்பட்டனர் . சதி வழக்குகளில் பூட்டப்பட்டனர் . இது வரலாறு.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...