ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டி ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் 6 ஆயிரத்து 227 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 25 ஆண்டு முதல் 35 ஆண்டுகள் வரை போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தவர்கள். இவர்களுடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்குவதற்கு போக்குவரத்து கழகங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டப்படியான ஓய்வூதியப் பலன்கள் எதையும் அரசாங்கம் இன்று வரையிலும் அவர்களுக்கு வழங்கவில்லை.

இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒட்டு மொத்த தொகை ரூபாய் 1625 கோடி என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய இறுதிக் காலத்தில் வாழ்வதற்காக என்றோ அல்லது வீடு கட்டுவதற்காக அல்லது குழந்தைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்காக திட்டமிட்டு சேமிக்கப்பட்ட பணம் இது.

இந்தப்பணம் ஓய்வு பெறுகிற நாளில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இருக்கிறது. இதனால் இந்த ஓய்வு பெற்ற ஊழியர்களில் பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பல குடும்பங்களில் இதனால் திருமணங்கள் தள்ளிபோய் கொண்டே இருக்கின்றன. ஆனால் மாநில அரசு இதைப் பற்றி கவலையும் பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை ஓய்வு பெற்றுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய கிராஜூவிட்டி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...