கட்சியை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை: தோழர் சீத்தாரம் யெச்சூரி பேட்டி

சமர்முகர்ஜி நகர் (விசாகப்பட்டினம்), ஏப். 17 –

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டமைத்தால்தான் மதவாத அபாயத்தையும், தாராளமய பொருளாதார கொள்கைகளையும் எதிர்த்து முறியடிக்க முடியும் என்பதால்தான் கட்சியின் வளர்ச்சிக்கே தற்போது முன்னுரிமை அளிக்கிறோம் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யெச்சூரி கூறியது வருமாறு:

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சிபிஎம் அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன நகல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் வியாழனன்று (ஏப்.16 ) பிற்பகல் தாக்கல் செய்தார். மத்தியில் உள்ள மோடி அரசு மற்றும் பாஜக-வால் தொடுக்கப்படும் வலதுசாரி தாக்குதல்களை வலுவாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

மோடி அரசாங்கத்தால் மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமய கொள்கைகளை எதிர்த்து தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. மேலும், இந்துத்துவா சக்திகளால் எழுந்துள்ள மதவாத அபாயத்தை எதிர்த்துப் போராட மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை விரிவான அளவில் திரட்ட வேண்டிய அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த இரண்டு போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டுமென்று கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியை சுயேட்சையாக வலுப்படுத்துவதற்கு இந்த நகல் அறிக்கை முன்னுரிமை அளிக்கிறது. மேலும் இடதுசாரி கட்சிகளிடையே ஒற்றுமையை விரிவுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இடது மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்ட சிபிஎம் தீவிரமாக பணியாற்ற வேண்டுமென்று வலியுறுத்தி உள்ள இந்த அறிக்கை, அதன்மூலமே இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் முன்னேற்றத்தை காண முடியும் என்று கூறியுள்ளது.

இந்த நகல் அறிக்கையுடன் கட்சியின் அனைத்து மட்டங்களில் இருந்தும், தனிப்பட்ட கட்சி ஊழியர்களிடம் இருந்தும் பெறப்பட்ட 2,552 திருத்தங்களும், 248 ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் 71 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த அறிக்கை மீது ஏப்.16 அன்று மாலை முதல் பிரதிநிதிகளின் விவாதம் தொடங்கியது. இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

தீர்மானங்கள்

ஏப்.16-17 தேதிகளில் மேலும் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கலாச்சாரம் மற்றும் அறிவியல் பார்வை குறித்த தீர்மானமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

வேலைவாய்ப்பு, வேலையில்லா கால நிவாரணம் மற்றும் வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்குதல் குறித்த தீர்மானமும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த தீர்மானமும், இணையதளத்தை பரவலாக பயன்படுத்துவதை முடக்கும் வகையில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்தும், வடகிழக்கு மாநில மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும், மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் அத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு யெச்சூரி கூறினார்.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கட்சி செயல்படுமா? என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் அறிவுப்பூர்வமாக இருந்தாலும் அவர்களுக்கு மாணவர் அமைப்பு போன்ற ஜனநாயக் பூர்வ ஏற்பாடுகள் செய்து தரப்படுவதில்லை. அரசியலில் அவர்கள் ஈடுபடுவதையே தடுத்துவிட்டு, அவர்கள் எங்களை நோக்கி வர மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

கட்சியை வலுப்படுத்த முன்னுரிமை

மக்களுக்கு பலனளிக்கக்கூடிய விஷயங்களை மேற்கொள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசை ஆதரித்ததைப் போல் மதச்சார்பற்ற கட்சிகளின் தலைமையில் அமையும் அரசுக்கு சிபிஎம் ஆதரவளிக்குமா? என்ற கேள்விக்கு, “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கனித்து அதற்கேற்ப இப்போது செயல்பட முடியாது. அதற்கான சூழ்நிலை வரும்போது, இந்திய மக்களுக்கும், நாட்டிற்கும் எதை செய்தால் பலனளிக்குமோ அதை கட்சி அப்போதைய நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யும். இப்போதைக்கு கட்சியை சுயேட்சையாக வலுப்படுத்துவதற்குதான் முன்னுரிமை அளிக்கிறோம். வலுவான கட்சி இருந்தால்தான் வலுவான எதிர்க்கட்சியாக உருவாக முடியும். அப்போதுதான் நாட்டை சீர்குலைக்கும் மதவாத அபாயத்தையும், பொருளாதார ரீதியான மத்திய அரசின் மோசமான கொள்கைகளையும் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இப்போதைக்கு கட்சியை வலுப்படுத்துவதிலேயே நாங்கள் அதிகமாக கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

அரசியல் நடைமுறை உத்தி குறித்து விவாதித்த போது கட்சி என்ன தவறு செய்தது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதா? அப்படியென்றால் அந்த தவறுகள் என்ன என்று மற்றொரு நிருபர் கேட்டதற்கு“ எங்கு தவறு நடந்தது என்பது குறித்து கட்சியின் பிளீனம் விவாதக்கும்” என்று கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் ஆந்திர மாநிலச் செயற்குழு உறுப்பினர் நரசிங்கராவ் உடனிருந்தார்.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...