கனிம மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு வருவாய்த்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. கனிம மணல் கொள்ளை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அம்மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை அம்மாவட்டங்களிலும் கனிம குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருந்தது.

தற்போது திரு.ககன் தீப் சிங் பேடி குழுவினர் தூத்துக்குடி கனிம மணல் கொள்ளை குறித்த அறிக்கையை ஒட்டி தமிழக முதல்வர் அவர்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெரும் கனிம குவாரிகளை இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் மேற்படி ஆய்வு முடியும் வரை கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் எடுக்கும் பெரும் கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வரின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

இந்த ஆய்வினை விரைவில் முடித்து கனிம கொள்ளை தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இதுநாள் வரை நடைபெற்ற கொள்ளை குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முறைகேடு மூலமாக பெற்ற நிதியை அரசு கைப்பற்றவும் நடவடிக்கை எடுப்பதோடு கனிம மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று எடுத்து நடத்துமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply