கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ நிபுணர்களை அனுப்பக் கோரி கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ நிபுணர்களை அனுப்புவது மற்றும் கொரோனா மருத்துவ ஆய்வகம் அமைத்திடக் கோருவது தொடர்பாக, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று 29.03.2020 தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்;

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களுள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5000க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்ற ஐயத்தில் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்படும் நிலைமை உள்ளது. ஆனால், இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுடைய இரத்த மாதிரியை சோதிப்பதற்காக சிறப்பு ஆய்வு மையம் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரி எடுத்துப் பல நாட்கள் கடந்த பின்னர்தான் அவர்களுடைய நோயின் தன்மை குறித்த ஆய்வு அறிக்கை வருகிறது. அதற்குள் அந்த நோயாளி இறந்துபோகும் நிலைமை உள்ளது. எனவே, கன்னியாகுமரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலான மருத்துவ நிபுணர்களையும், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களையும் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மிக அவசரத் தேவையாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த மாதிரியை சோதிப்பதற்கான சிறப்பு ஆய்வகத்தை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போரை வெளியே வராதவாறு கண்காணித்து அவர்களுக்குத் தேவையான உணவு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுடன் மருத்துவக்குழுவையும் அனுப்பி உரிய மருத்துவ சிகிச்சைகளையும் அங்கேயே மேற்கொள்ள வேண்டும். மேலும், இம்மாவட்டத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
தங்கள் அன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...