கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிர்பலி வாங்க துடிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டம் மத்திய-மாநில அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை அதிகம் நம்பி பயணம் செய்யும் மக்கள் கொண்ட மாவட்டம். இம்மாவட்டத்தில் மலையோர பகுதிகள், கடற்கரை பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியானவை.மாவட்டத்தில் 12 பணிமனைகள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உள்ளன. 820 பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள் உயிரை பணயம் வைத்தே பயணம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கூட்ட நெரிசல்.
இந்நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், வருடபிறப்பு போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக பேருந்துகளில் பயணம் செய்யும் காலம். தொடர் கனமழையால் குடைபிடித்தபடியே பயணிகள் பேருந்தில் பயணம் செய்யும் அவலநிலை. சில நேரங்களில் ஓட்டுனர்களும் குடைபிடித்தபடியே பேருந்தை இயக்குகின்றனர். திடீரென பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து எங்கோ சென்று முட்டி உடைகிறது. சில நேரம் திடீரென புகை எழும்புகிறது. எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற அச்சம் பயணிகளுக்கு. இன்று அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் வீடு வந்துசேர்ந்தால் தான் கணக்கு என்றாகிவிட்டது.
தற்போது நீண்ட போராட்டங்களுக்கு பின் புதிய வண்டிகண் என இதர மாவட்டங்களில் மூன்று, நாங்கு ஆண்டுகள் ஓடிய 100 பேருந்துகள் இறக்குமதியாகியுள்ளன. ஒரு மாதம் ஆவதற்கு முன்பே இந்த பேருந்துகளின் நிலைமை மோசமடைந்துவிட்டன. இப்பேருந்துகளில் பெரும்பாலானவை ஒழுகுகின்றன. சாலைகள் மரணக்குழிகளாக மாறிவிட்டன. கட்டுப்பாடற்ற முறையில் சில அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் சாலைக்கு ஒதுக்கும் நிதியில் பெரும்பகுதியை கமிஷனாக வாங்கி ஏப்பமிடுவது கண்கூடாக தெரிகிறது. இக்கொடுமையை நாம் எதிர்த்தாக வேண்டும். கமிஷன் கொடுப்பதால் ஒப்பந்தகார்ர்கள் விழிபிதுங்கி நிற்பதை காணமுடிகிறது. எனவே, சாலை சீரமைப்பு என்ற பெயரில் வர்ணம் பூசும் வேலை மட்டுமே நடைபெறுகிறது. சாலை சரிசெய்யப்பட்ட ஒன்று இரண்டு மாதங்களிலேயே காணாமல் போய்விடுகிறது. மாவட்டம் முழுவதும் எலும்புமுறிவு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தினமும் ஏகப்பட்ட கூட்டம். சாலைகள் மரணக்குழிகளாக மாறிவிட்டதால் விபத்துக்கள் எண்ணிலடங்காத அளவு நடைபெறுகிறது. சாலையோரத்தில் நடந்து செல்லும் மக்கள் உயிரை பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தில் செல்கின்றனர்.
எனவே, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவையான போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்திட வேண்டும், சிறப்பு நிதிகள் ஒதுக்க வேண்டும், புதிய பேருந்துகள் இயக்க வேண்டும், தரமான முறையில் சாலைகள் செப்பனிட வேண்டுமேன வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பணிமனைகள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்திட முடிவு செய்துள்ளது.

என்.முருகேசன்
மாவட்ட செயலாளர்

Check Also

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ...