கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்!

காரல் மார்க்ஸ் குறித்த நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட உடுமலை கவுசல்யா சங்கர் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கம்யூனிஸ்டுகளின் பாதை என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்டது. அது சுயநலமில்லாததாகும். ‘ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒரு வேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக விளங்கலாம். ஆனால் ஒரு பொழுதும் முழு மனிதனாக ஆக முடியாது. உண்மையிலேயே முழு மனிதனாக விளங்க முடியாது.’

தனது பள்ளி இறுதித் தேர்விற்காக எழுதிய கட்டுரை ஒன்றில் மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய இந்த ஜீவனான வரிகளே தன்னலமற்ற முறையில் இயங்கும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்சம். மார்க்ஸ் கூற்றின் ‘பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக மகத்தானவர்கள்’ என அழைக்கிறது. அத்தகைய மகத்துவமான வாழ்க்கையை வாழ்பவர்களே கம்யூனிஸ்டுகள். நூற்றாண்டு விழாவின் மூலம் நினைவுகள் போற்றப்படும் அன்னை கே.பி.ஜானகியம்மாள் அவர்களின் வாழ்வு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சுதந்திர வேட்கையோடு போராட்டங்கள் நடைபெற்ற காலத்தில் மக்களிடம் எழுச்சி உணர்வுஉருவாக்க தியாகி விஸ்வநாததாஸ் அவர்களோடு பெண் வேடத்தில் யாரும் நடிக்க முன்வராத அந்தக் காலத்திலேயே துணிச்சலாக நடித்தவர் அன்னை ஜானகியம்மாள்.

இன்று ஐந்து தனித்தனி மாவட்டங்களாக இருக்கும் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் முழுவதும்பயணித்து இயக்கத்தைக் கட்டிவளர்த்தவர் அவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், துணிச்சலான களப்பணிகளுக்காகவும் ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட மகத்தான தலைவர் அவர். அவரது தியாக வாழ்வு போற்றத்தக்கது மட்டுமல்ல; கம்யூனிஸ்டுகள் பின்பற்றத்தக்கதும் ஆகும். நான் ஒரு முறை நம்முடைய மகத்தான தலைவர் என்.சங்கரய்யா அவர்களிடம் கேட்டேன். நீங்கள் கல்லூரி இறுதித் தேர்வு நடைபெற பத்து நாட்கள் இருக்கும் சூழலில் போராடி சிறை செல்லும் நிலை உருவானபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று. ‘நாட்டின் விடுதலைக்காக சிறை செல்லும் மகத்தான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற பூரிப்பு எனக்கு மற்ற அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது… இதைவிட பெருமை வேறு என்ன வந்துவிடப் போகிறது என் வாழ்க்கையில்’ என்று பதிலளித்தார் சங்கரய்யா.

இத்தகைய தியாகத்திற்கும் தனித்துவத்திற்கும் சொந்தமானவர்களே நமது தலைவர்கள். இவர்களின் பாதையைப் பின்பற்றியே பொதுவுடைமை அரசியலைத் தேர்வு செய்தவர் தோழர் கே.ராஜன். 1952 முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை கட்சியிலும், தொழிற்சங்க அரங்கத்திலும் ஏற்று திறம்பட பணியாற்றினார். குறிப்பாக கூடலூர் ஜென்மம் நில உரிமைக்கான போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கான போராட்டங்கள் என அனைத்திலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார் கே.ராஜன். அவரைப் போன்ற தலைவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்றைய நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...