கருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து

நமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து விடுதலையை சாத்தியமாக்கிய தியாகிகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சாதி, மத, பாலின பேதமில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தியாகிகளின் கனவை நனவாக்க இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

அனைத்துப்பகுதி மக்களின் ஒன்றுபட்ட, வீரம் செறிந்த நெடிய போராட்டத்தின் காரணமாகவே இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பின்பற்றிய பிரித்தாளும் சூழ்ச்சியைப் பின்பற்றி மக்கள் ஒற்றுமையை சிதைத்து வருகின்றனர்.

விடுதலை பெற்ற இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டுமென்பதை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. ஆனால், அரசியல் சாசனத்தின் அடித்தளத்தையே அழிக்க முயல்கிறது இந்துத்துவா மதவெறிக்கூட்டம்.

கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து வெகுண்டெழுந்து போராடியது அடிமை இந்தியா. இன்றைக்கு பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சூழ்நிலையில் இந்த அனைத்து உரிமைகளும் மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் அழுத்தமாக முன்வைப்பவர்களின் உயிருக்கே உலை வைக்கும் சூழ்நிலை உள்ளது.

பெண்கள், குழந்தைகள் நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.  தலித்துகள், சிறுபான்மை மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.

“பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ” என்று அன்றைக்கு குமுறினார் மகாகவி பாரதியார். ஆனால், இன்றைக்கு மோடி ஆட்சியில் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கே என்பதே கொள்கையாகிவிட்டது. வறுமை, வேலையின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சமூகப் பிணிகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கை நாளும் நலிந்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்குப் பயந்து, பணிந்து பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் முற்றாக பறிக்கப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைகாக போராடியவர்களுக்கு விடப்பட்ட மிகப்பெரும் அச்சுறுத்தலாகும். கூட்டம் கூடும் உரிமை, ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும் உரிமை போன்றவை மறுக்கப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் போராடி விடுதலை பெற்றோம். கருத்துரிமை எங்கள் பிறப்புரிமை என்று உரத்து முழங்கவேண்டிய காலமிது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை காத்து நிற்க இந்த சுதந்திரத் திருநாளில் உறுதியேற்போம்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...