கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்!

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை:


29.03.2015

அன்பார்ந்த நண்பர்களே, தலைவர்களே, வணக்கம்!

சரியான நேரத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்தக் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள். ஏற்பாடு செய்த அமைப்பாளர்களை நான் பாராட்டுகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்திட சங் பரிவார அமைப்புகள் தாக்குதல் தொடுத்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு, மத்திய அரசினுடைய ஐடி சட்டப் பிரிவு 66 (ஏ) வை ரத்துச் செய்து, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றம் மகத்தானதொரு தீர்ப்பை அளித்துள்ளது. இந்தச் சட்டப்பிரிவு பலரை சிறைக்கு அனுப்பியது.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க எத்தணித்த சங் பரிவார அமைப்புகளுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களும் இங்கே கூடியுள்ளோம்.

கடந்த காலத்திலும் தமிழகத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு , தமிழ் வார இதழ் ஆனந்த விகடன், மற்றொரு தமிழ் வார இதழான நக்கீரன் போன்ற ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க, அரசே நடத்திய தாக்குதல்களின் போது பத்திரிக்கையாளர்கள் ஒரே குரலில் எழுந்து நின்றனர். பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆதரவாக மக்களும் நின்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க ஊடகத்தைத் தாக்குகிறபோது நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்போம். ஊடகம் என்பது இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் ஆகிய மூன்றுமே இந்தியாவில் மகத்தான வளர்ச்சியை அடைந்துவருகின்றன. மேலை நாடுகளில் காட்சி, இணைய ஊடகங்கள் வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் வீழ்ச்சியை சந்திக்கின்றன, ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக அச்சு ஊடகம் உட்பட அனைத்து ஊடகங்களும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

இந்தியாவில் காட்சி ஊடகத்தைக் காண்பவர்கள் 65 கோடி பேர். அச்சு ஊடகங்களை வாசிப்போர்  35.3 கோடி பேர். கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க ஊடகங்கள் முயற்சியெடுத்தால் இந்தியாவில் பிரளயத்தையே உருவாக்கிவிட முடியும். அத்தகைய வாய்ப்பும், சக்தியும் ஊடகங்களுக்கு உள்ளது.

இங்கு, ஊடகங்களின் உள்ளடக்கத்தைப் பற்றி சில வார்த்தைகளை நான் வேதனையோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பத்திரிகையாளர் அமைப்பு முன்மொழிந்த 5 தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்போடு செய்திகளை, கட்டுரைகளை வெளியிட வேண்டும், எழுதிட வேண்டும் என்று 5 ஆவது தீர்மானம் கூறுகிறது. இது வரவேற்க வேண்டிய தீர்மானம். ஊடகங்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது, ஊடகத்தினுடைய உரிமையாளர்கள்தான். ஊடகங்களின் உள்ளடக்கம் தற்போது எப்படி உள்ளது என்பதை பரிசீலிக்க வேண்டும்.

சமீப காலத்தில் ஊடக நிறுவனங்கள் பணம் பெற்று செய்தி வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதாக – குடியரசுத் துணைத்தலைவர் அன்சாரி வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.  செய்தி வெளியிடுதல், கட்டுரைகள், தலையங்கங்கள் பெரும்பான்மையாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தொடுவதாக அமைவதில்லை. கார்பரேட் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இந்திய ஊடகங்கள் உள்ளன. உதாரணமாக: ஓரிரு சம்பவங்களை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பெண்ணும், கடலூரில் இருந்து தலித் சமூகத்தைச் சாந்த ஒரு இளைஞரும் திருப்பூருக்கு வேலை தேடிச் செல்கின்றனர். அவர்கள் இருவரும் காதலித்து, சாதி மறுத்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதனை பெண்ணின் பெற்றோர் ஏற்கவில்லை. சில ஆண்டுகள் கடந்து, அந்த வாலிபர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார். பெண், திருச்சியில் ஒரு வேலையில் சேர்ந்து வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் ஆசை வார்த்தை காட்டி, அந்தப் பெண்ணையும், ஐந்து வயதும் 3 வயதும் கொண்ட இரண்டு மகன்களையும் அழைத்து – பெற்றவர்களே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டனர். இது நாம் வாழும் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் நடைபெற்ற கோரச் சம்பவம். வேதனையோடு சொல்கிறேன், இந்தச் சம்பவம் ஊடகங்களை உலுக்கவில்லை.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண், தலித் வாலிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காக பெண்ணின் அப்பா மற்றும் வெரு சிலருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்துகிறார். நெருப்பில் எரிவதற்கு முன் தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை, அப்பா இது நெருப்பில் உருகிவிடும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன் தந்தையிடம் கொடுக்கிறார். இந்தச் செய்தியும் கூட ஊடகங்களை உலுக்கவில்லை.

இத்தகைய கெளரவக் கொலைகள் அல்ல அல்ல ஆணவக் கொலைகள் பற்றி சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, தமிழகத்தில் இத்தகைய கொலைகளே நடக்கவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார். அவர் சொன்ன பதிலுக்கு முன்னதாக  42 கொலைகளும், பிறகு 4 கொலைகளும் என கடந்த 2 ஆண்டுகளில் 46 ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இதனை யாரிடம் போய்ச் சொல்வது?

அதே போல இன்று, தமிழகத்தில் உயர் கல்வி பெரும்பாலும் தனியார்மயமாகிவிட்டது. காசேதான் கடவுளடா என்பது போல, காசிருந்தால் உயர்கல்வி என்ற நிலைமை உருவாகிவிட்டது. பள்ளிக் கல்வியிலும் இந்த நிலைமை உருவாகி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து – சமீப காலத்தில் 1500 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. 2000 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை  குறைந்து மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அரசுப்பள்ளிகள் மூடப்பட்டால், ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?  இப்படிப்பட்ட பிரச்சனைகள் சில ஊடகங்களில் செய்தியாகின்றன. ஆனால் இந்த நிலையை மாற்றிட அரசுக்கும், சமூகத்திற்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் விதத்தில் ஊடகங்களின் தலையீடு இல்லை.

மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2015 பிப்ரவரி மாதம் வரையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1373. மாட்டு இறைச்சி வைத்திருந்தாலே 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற சட்டத்தைக் கொண்டுவந்த மராட்டிய பாஜக அரசு, 15 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் தொடரும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

இங்குதான் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் வெளியிடும் செய்தி பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. “Information without transformation is just gossip” அதாவது “மாற்றத்தை உருவாக்காத எந்த தகவலும், கிசுகிசு மட்டுமே” என ஒரு ஊடகவியலாளர் கூறியுள்ளார். டார்ஜியா விட்டாச்சி என்ற அந்த ஊடகவியலாளர், இலங்கையில் ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலில், அன்றைய அரசின் பாத்திரத்தை அம்பலப்படுத்தி நூல் எழுதியதால் நாடுகடத்தப்பட்டார். அவர் எழுதிய நூலுக்காக, மகசாசே விருதும் பெற்றார்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்காத. மக்களின் அவலங்களைப் போக்காத, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்காத செய்திகள் கிசுகிசுக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நமது ஊடகங்களில் கிசுகிசுக்கென ஒரு பகுதி இருந்தாலும், மற்ற செய்திகளுமே கிசுகிசுக்களாகத்தான் உள்ளன என்பதை அவரின் சொற்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இத்தகைய நிலைமைகளுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தோமானால் – ஊடகங்களின் உடைமை, உள்ளடக்கம் மற்றும் ஊடக கலாச்சாரம் என அனைத்தும் கார்ப்பரேட்மயமாகிவருவது முதல் பிரச்சனை. எல்லாவற்றிலும் லாபம் என்ற விதத்தில் நம்முடைய ஊடகங்கள் அனைத்தும் வணிகமயமாகிவருகின்றன என்பது இரண்டாவது பிரச்சனையாக வருகின்றன. வாக்கு வங்கியை மையப்படுத்தும் அரசியலைப் போல, விளம்பரங்களை மையப்படுத்துவதாக ஊடகங்களின் ஓட்டமாகிவிட்டது.

அது தவிர, தற்போது ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள், மிகப்பெரும் முதலீட்டுடன் நேரடியாக ஊடகத் துறையில் நுழைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 30க்கும் அதிகமான அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களை அந்த நிறுவனம் தனக்கு சொந்தமாக்கியது. இவையெல்லாம் செய்திகளை தகவல்கள் என்ற நிலையிருந்து – பொழுதுபோக்கு மையமானவையாக மாற்றுகின்றன அல்லது ஸ்டேட்டஸ் கோவைப் பாதுகாக்கின்றன. அரசினுடைய சட்டங்கள், கொள்கைகளால் மக்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுவதற்கு பதிலாக ஊடகங்கள் தனிப்பட்ட நபர்களின், பிரபலங்களின் வாழ்க்கையின் சிறு சிறு விசயங்களை செய்தியாக்குகின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தின் பயன்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்தப் பின்னணியில், தனக்கு சரியென்று பட்ட முற்போக்கான கருத்துக்களை எழுதக்கூடிய பத்திரிக்கையாளர்களின் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் நிலைமை இதுவாகத்தான் உள்ளது. சில நேரங்களில் ஊடக உரிமையாளர்கள் அதனை அனுமதித்தாலும், சங் பரிவாரம் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தாக்கத் தொடங்குகின்றன.

ஊடகவியலாளர்களுக்கு அனுபவமும், திறமையும், நிபுணத்துவமும் இருந்தாலும் கூட – அவற்றைப் பயன்படுத்தவோ, வளர்த்துக்கொள்ளவோ அனுமதிக்காத ஆரோக்கியமற்ற சூழலும் சில ஊடகங்களில் நிலவுகின்றன.

ஊடகங்கள் ஒரு Knowledge Industry அறிவு செயல்பாட்டு தொழில். என்று கூறுகிறார்கள். கணிணி என்ற இயந்திரத்தோடு வேலை செய்தாலும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் மனிதர்கள் தானே. ஊடகச் சுதந்திரம் பற்றி பேசுகிற போது ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் முக்கியம். அவர்கள் சுயமரியாதையுடனுடம். கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டுமென்பது மட்டுமல்ல ஊதியம் உள்ளிட்ட அவர்களுடைய அனைத்து நலன்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் படைப்புத் திறனுடன் பணியாற்ற முடியும். ஊடகச் சுதந்திரமும், ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊழியர்களுடைய சுதந்திரமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது, பிரிக்க முடியாது. ஊடகச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

ஊடகச் சுதந்திரத்தின் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்க அரசு முயன்றாலும் சங்பரிவார அமைப்புகள் முயன்றாலும் அதை எதிர்த்து குரலெழுப்ப என்றும் நான் சார்ந்துள்ள அமைப்பு உங்களோடு நிற்கும்.

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...