கரும்புக்கான பாக்கித் தொகையினை விவசாயிகளுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (26.10.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கரும்புக்கான பாக்கித் தொகையினை விவசாயிகளுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளாக கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையினை (SAP) கொடுக்க முடியாது என தனியார் சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதன் விளைவால் தனியார் சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய கரும்பு பணபாக்கி மட்டும் சுமார் ரூ. 1650 கோடி நிலுவையில் உள்ளது. கூடுதலாக கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகை சுமார் ரூ. 350 கோடி நிலுவையில் உள்ளது. இதனை பெற்றுத் தர வேண்டுமென கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.

தொடர்ந்து பாக்கித் தொகை கிடைக்காததன் விளைவாக விவசாயிகள் சொல்லொணா நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள். விவசாயிகள் அடமானம் வைத்துள்ள நகைகள் ஏலம் போடப்படுகின்றன. டிராக்டர்கள் ஜப்தி செய்யப்படுவதால் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. அன்றாட வாழ்வுக்கே விவசாயிகள் அவதிப்படுகின்றனர், தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டுள்ள சூழ்நிலையில் விவசாயக் குடும்பங்கள் பண்டிகை கொண்டாட முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

போராடும் கரும்பு விவசாயிகளை கைது செய்வதா?

இந்நெருக்கடியான சூழ்நிலையில் கரும்பு பண பாக்கியை பெற்று தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், விவசாய சங்கத் தலைவர்களான பி. சண்முகம், டி. ரவீந்திரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பண பாக்கித் தொகையினை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதற்கு மாறாக, நெருக்கடி தாங்க முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கைது செய்துள்ளது. தமிழக அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இனியும் காலதாமதமின்றி தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி பாக்கித் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத் தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்துவதுடன், போராடும் கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...