கறுப்புப் பணத்தை வெளிக் கொணர மோடி அரசால் முடியாது-சிபிஐ(எம்)

புதுதில்லி, நவ. 9-500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தது கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்குத் தேவையான பலன்களை அளித்திடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பது கறுப்புப் பணத்தை வெளிக்கொணரத் தேவையான பலன்களை அளித்திடாது. இது மிகவும் அற்ப அளவிலேயே விளைவுகளை ஏற்படுத்திடும். ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பதானது கறுப்புப் பணம், போலி கரன்சிகள், ஊழல் மற்றும் பயங்கரவாதம் என அனைத்தையும் தடுத்திடும் என்று கூறுவதில் சாரம் எதுவும் இல்லை. பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளபடி, கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி வெளிநாட்டுக் கரன்சிகளாகத்தான் உள்ளன. போலியான ரூபாய் நோட்டுகள் என்பவை எந்த வடிவத்திலும் அச்சடிக்க முடியும்.

புதிதாக 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதாலோ, மீண்டும் புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாலோ எதிர்காலத்தில் கள்ளத்தனமான முறையில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்படாமல் நிறுத்திட உதவும் என்று சொல்லிவிட முடியாது. பயங்கரவாதிகளுக்கு நிதி என்பது மின்னணு மாற்றல்கள் மூலம் வருகிறது என்பதும், இவை ஒன்றும் கரன்சி பரிவர்த்தனைகள் மூலம் அல்ல என்பதும் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.குறிப்பிட்ட கால அளவிற்குள் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பினாமி பரிவர்த்தனைகளைத் தடுத்திட எவ்விதமான உருப்படியான நடவடிக்கையும் இல்லை. பிரதமரின் அறிவிப்பால் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த விளைவு என்பது, பொருளாதார வாழ்வில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொடுக்கல், வாங்கல்களை மொத்தமாக சீர்குலைத்திருக்கிறது என்பதேயாகும். தினக்கூலி பெறும் தொழிலாளர்கள், மீனவர்கள், சாலையோர மற்றும் நடைபாதை கடைக்காரர்கள் , வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வை இது மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்றால் இத்தகைய அடித்தட்டு மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அதிகாரவர்க்கத்தால் அலைக்கழிக்கப்பட இருக்கிறார்கள் என்பதேயாகும். வரி ஏய்ப்பின் மூலமாக பல்வேறு வடிவங்களில் பணப் பித்தலாட்டம் செய்திடும் நபர்களின் அடிப்படை வழிகளைத் தடுத்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவும் எவ்வித முயற்சியும் இல்லை.மோடி அரசாங்கமானது வேலையின்மையைப் போக்குவதிலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும், உள்நாட்டுத் தேவைகளை மீளவும் ஏற்படுத்துவதிலும் பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டுவிட்டது. இவற்றின் விளைவாக நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும், குறிப்பாக தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றை மூடி மறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கம், நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. உண்மையிலேயே இந்த அரசுக்கு கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் இதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.

English Version:- http://cpim.org/pressbriefs/posturing-black-money

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...