கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், திமுக-வின் தலைவரும் மற்றும் தமிழ்நாடு அரசியலின் வல்லமைமிகுந்த தலைவருமான மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை இருந்தார். அவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல்களில் ஒருமுறைகூட தோல்வியடையாது, 13 தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி பன்முகத்திறமைகள் படைத்தவர். அவர் ஒரு சிறந்த நிர்வாகி, எழுத்தாளர், மிகத் திறமைமிக்க பேச்சாளர். மேலும் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை மாண்புகளை உயர்த்திப்பிடித்தவர். அவர் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகத்தின் உருவரைகளைச் செதுக்கியதில் ஒப்பற்றப் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.

அவர், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்காகவும், மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும்  வீரமுதல்வராக விளங்கி தொடர்ந்து உறுதியுடன் போராடியதற்காக, என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவர், நாடு தழுவிய அளவில் கூட்டணி அரசியலை வடிவமைத்ததிலும் முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, தன்னுடைய இதயங்கனிந்த இரங்கல்களை அவருடைய குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒட்டுமொத்த தலைமைக்கும், முன்னணி ஊழியர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...