கல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு

– தோழர் பி.சுகந்தி

எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற அச்சத்துடனும், கனத்த இதயத்துடனும் அசோக் வீட்டுக்கு புறப்பட்டோம் நானும் கற்பகமும் ராஜகுருவும். வீட்டு வேலியில் பறந்து கொண்டிருந்த செங்கொடியே அவனது வீட்டின் அடையாளம். எங்களது வாகன சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து அசோக் அம்மாவின் அழுகுரல் பீரிட்டது, நிலை குலைந்து போனோம். அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்து அந்த அழுகுரல் உச்சத்தை அடைந்தது. தாமிரபரணியாக கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆறுதல் பகிர எங்களிடமும் அத்தருணத்தில் கண்ணீர் மட்டுமே இருந்தது. அம்மாவின் அழுகையை நிறுத்த முயற்சித்தோம். முடியவில்லை.

ஆனால் அவரே ஏதோ முடிவெடுத்தவராக சட்டென்று அழுகையை நிறுத்தி கம்பீரமானார். வார்த்தைகள் அம்பென தெறித்தன. எங்கள் கிராமத்தில் இதுவரை 6 தலித்துக்களை சாதி வெறியர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த பாழாய் போன சாதி வெறிக்கு என் மகன் அசோக்கே கடைசி பலியாக இருக்கட்டும். அதற்காக கட்சி எத்தனை போராட்டம் நடத்தினாலும் நானும் கலந்து கொள்கிறேன்.

துயரத்தைக் கடந்து சாதி வெறிக்கெதிராக அவரது கோபம் கொப்பளித்தது. ஏதோ போராட்டத்திற்குப் போகிறான், கட்சி கொடி ஏற்றுகிறான், மாநாட்டுக்குப் போகிறான் என நான் நினைத்திருந்தேன். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் என் மகன் இவ்வளவு பெரிய தலைவனாக இருந்திருக்கிறான் என்பதை அவன் இறந்த பின் தெரிந்து கொண்ட அம்மாவாயிருந்திருக்கிறேனே… என் மகன் வயதில் எத்தனை பிள்ளைங்க, எத்தனை தலைவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். என் மகனுக்காக இத்தனை பேரா?

மீளா துயரிலும் முகத்தில் பெருமிதம் தோன்றி மறைந்தது. புத்தகம், புத்தகம், புத்தகம். புத்தகமே அவன் உயிர்மூச்சு. வீட்டில் புத்தகத்துடன் தான் அவனை பார்க்க முடியும். கம்பெனியில் வேலை முடிந்து கட்சி ஆபீஸ் போய், போராட்டம் ஒன்ன முடிச்சு எவ்வளவு சோர்வா வந்தாலும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்காமல் தூங்கமாட்டான். காலேஜ் படிக்கும் போது கூட கண் முழித்து படிக்கவில்லையே மகனே என்று கேட்டால், கல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு என்பான், என சொல்லிக் கொண்டே அவன் படித்து முடித்த புத்தகங்களை கட்டுக்கட்டாக, அள்ளி வந்து எங்கள் கண் முன்னால் குவித்தார். அவன் சம்பளத்தின் ஒரு பகுதியை புத்தகம் வாங்கவே செலவு செய்வான்.

ஏதோ அம்பேத்கர் புத்தகமாமே. 37 இருக்காம். அதில கொஞ்சம் தான் வாங்கீருக்கேன். மிச்சமெல்லாம் வாங்கனும்மா. கொஞ்சம் என் சம்பளத்தை எதிர்பார்க்காம சமாளிச்சுக்கோம்மா என்றான், என்றவர் புத்தக அலமாரியை காட்டினார். டாக்டர் அம்பேத்கரின் நூல் தொகுப்பு ஆறு புத்தகங்கள் அசோக்கின் அலமாரியை அலங்கரித்தன.

பேச்சினூடே மகனே அசோக்கு! இந்த புத்தகங்களையெல்லாம் உன் கண்கள் இனி எப்போது படிக்கும்? என்னைப் போலவே இந்த புத்தகங்களும் உன்னைத் தேடுமடா என கதறினார். அசோக் உடல் அடக்கத்திற்கு பெட்டிக்குள் வைக்கப்பட்ட போது அவளது தம்பி ஓடிச் சென்று அம்பேத்கர் தொகுப்பு புத்தகம் ஒன்றை எடுத்து வந்து பெட்டி க்குள் அசோக்கில் தலைமாட்டில் வைத்ததை தோழர் கே.ஜி.பாஸ்கரன் நினைவு கூர்ந்தார்.

என் மகன் என்னிடம் வாஞ்சையாய் சமையல் கற்றுக் கொண்டான். நானும் கற்றுக் கொடுத்தேன். எங்கு மாநாடு, பேரணி, பொதுக் கூட்டம் என்றாலும் அவனே 20 பேருக்கு புளிச்சாதம் செய்வான். வேனில் ஏற்றுவான். பறந்து விடுவான். இனி என் மகன் எந்த மாநாட்டுக்கு செல்லப் போறான்? மகனின் வாழ்க்கை குறித்து எத்தனை பெருமிதம் அசோக்கின் அம்மா ஆவுடையம்மாவுக்கு.

இன்று ஆவுடையம்மாவுக்கு சாதி, மதம், இனம், மொழி, புவியியல் எல்லை கடந்து எத்தனை, எத்தனை பிள்ளைகள். தோழமை உறவுகள். மீண்டும் வருகிறோம் என்றவாறு தற்காலிகமாக விடைபெற்று புறப்பட்டோம். கட்சியின் பிள்ளையை இழந்த நமக்கு யார் ஆறுதல் தெரிவிப்பது?

எல்லையற்ற கலக்கத்துடன் வீதியில் கால் வைத்தோம். கால்கள் தடுமாறின. மண்ணின் மீதும், மக்களின் மீதும் அளவற்ற பிரியம் கொண்டு இளம் வயதிலேயே, வீரச்சமரில் உயிர்நீத்த சே, பகத்சிங்… என அத்தனை ஆதர்சங்களும் கண்முன் வந்து எங்கள் தோள்களைத் தொட்டு, கலங்காதீர் தோழர்களே! இதோ நாங்கள் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எங்களோடுதான் இருக்கிறான் அசோக். உங்கள் செயல்களில் இனி அவனும் வாழ்ந்து கொண்டேயிருப்பான் என்றனர்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...