கல்விக் கடன் செலுத்தவில்லை என்றால் வங்கி தேர்வில் பங்கேற்க தடை விதிப்பதா? சிபிஐ(எம்) கண்டனம்

பாரத ஸ்டேட் வங்கியின் 17 ஆயிரத்து 140 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்ப செலுத்தவில்லையென்றால்,  விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கல்விக் கடன் பெற்ற மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் வகையில் போடப்பட்ட உத்தரவாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கல்வி பயில மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் பணிக்குச் சென்றால் தான் அதை திருப்பிச் செலுத்த இயலும். ஆனால் வேலை கிடைக்கவில்லையென்றாலும் கடைசி தவணை முடிந்த ஒருவருட காலத்திற்கு பிறகு வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன. இந்த நிலையில் மேலும் ஒரு தாக்குதலாக வங்கிக் கடன் பெற்று செலுத்தாத மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பபை மறுப்பதோடு அவர்களை கடனாளியாக்குவதுடன் அவர்கள் மீது கடன் சுமையை ஏற்றி விடுகிறது. மற்றொருபுறம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை மறுப்பதால் வங்கிகளுக்கும் கடன் சுமை கூடுகிறது.

மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றாலும் கூட மாணவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘அனைவரும் சமம்’ என்பதற்கு இந்த உத்தரவு முற்றிலும் எதிரானதாகும். எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஸ்டேட் வங்கியின் நிபfந்தனையை ரத்து செய்ய வேண்டுமெனவும், அனைவரும் தேர்வு எழுதும் வண்ணம், தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25-ந் தேதியை  நீட்டித்து உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...