கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டை நிராகரிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டை இந்திய அரசு நிராகரிக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

உலக வர்த்தக அமைப்பு கல்விச் சேவையை வணிகமயமாக்கும் நடவடிக்கையை 2001 முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது 160 நாடுகள் உறுப்பினராக உள்ள உலக வர்த்தக அமைப்பின் மாநாடுகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில் கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் டிசம்பர் 15 முதல் 18 வரை உலக வர்த்தக அமைப்பின் 10வது மாநாடு நடைபெறுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தின் விளைவாக சமூகத்திற்கு கல்வி அளிக்கும் பொறுப்பை மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக கைவிட்டு, கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனியார்துறையிடம் விட்டுக் கொடுத்து, கல்வியை வணிகமயமாக்கி வருகின்றன. தற்போதைய பிஜேபி அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைத்துள்ளது. இத்தகைய நிலையில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதோடு, உயர்கல்வி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக மாறி விடும் ஆபத்து உள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள்.

கல்வி வர்த்தகப் பொருளாக மாற்றப்படும் சூழலில், வர்த்தக விதிகளின் அடிப்படையில் லாப நோக்குடனேயே கல்வி நிறுவனங்கள் இயங்கும் நிலைக்கு செல்லும். கல்வி கட்டணங்கள் உயரும். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை சாமானிய மக்கள் பெற முடியாத நிலைமை ஏற்படும். இடஒதுக்கீட்டு நடைமுறை பின்னுக்குத் தள்ளப்படும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தால் உள்நாட்டு கல்வி மற்றும் பண்பாட்டுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படும். சமூக அக்கறை, பொதுநலன், மக்கள் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தக நடைமுறையின் அடிப்படையில் கல்வி அளிக்கும் நடைமுறை கட்டமைக்கப்படும் நிலை உருவாகும்.

எனவே, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் நிபந்தனைகளை இந்திய அரசு நிராகரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பிஜேபி அரசை வலியுறுத்துகிறது. மேலும், கல்வியின் நோக்கத்தை சிதைக்காமல் – வணிகப்பொருளாக்காமல் – உயர்கல்வியை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல், மத்திய மாநில அரசுகளே கல்வி அளிக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென்றும், பொதுக்கல்வி முறையை பலப்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...