கல்வி – சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழக அரசின் தலையீடு தேவை

கடந்த புதன்கிழமை அன்று சென்னை தாம்பரத்தில் சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளிச்சிறுமி -ஸ்ருதி – பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டையிலிருந்து விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் கவலையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கோபாவேசமாக பேருந்தைத் தீக்கிரையாக்கியுள்ளனர்.

முகம் தெரியாத நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பத்திரிகைகள் பலவும் தலையங்கம் மூலமும் செய்திகள் வாயிலாகவும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் பத்திரிகைச் செய்தியை, பொது நல வழக்காக ஏற்றுக்கொண்டு, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணை நடத்தி வருவது வரவேற்கத் தக்கது.

தமிழக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது. குழந்தையை இழந்துள்ள குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது தமிழக அரசு. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், கல்வித்துறையில் உள்ள பல்வேறு சீர்கேடுகள் விபத்துக்கள் நடைபெறும் போதுதான் வெளிச்சத்துக்கு வருகின்றன. கும்பகோணம் தீ விபத்தில் 90 குழந்தைகள் மரணமடைந்த பிறகு அரசு தலையிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் எரியாத கூரைகள் அமைக்க உத்தரவிட்டது. தற்போதைய சம்பவத்தையொட்டி மாணவர்கள் அழைத்துச் செல்லும் பேருந்துகள், இவைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் போக்குவரத்துத் துறை போன்ற பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. ஆனால், கல்வி சம்பந்தமாக தொடர்ந்து வரக்கூடிய அரசுகள் எடுக்கிற நிலைப்பாடு – இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என கருதுவதற்கில்லை.

கல்விக்கு தேசிய உற்பத்தியில் 6 சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என சர்வதேசத்தரம் பற்றிப் பேசப்பட்டாலும், அரசுகள் அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. எல்லாத்துறைகளிலும், குறிப்பாக கல்வித்துறையில் அரசு தனது பொறுப்பைத் தொடர்நது கடந்த 20 ஆண்டுகளாகத் தட்டிக்கழித்து வருவதன் காரணமாக – குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பு தனியார் கைகளுக்கு மாறியுள்ளது. மாநில அரசு அறிவித்துள்ள தொலைநோக்குத் திட்டம் – 2023ல் பத்து ஆண்டுகளில் மொத்த ஒதுக்கீடு ரூ.15 லட்சம் கோடி. ஆனால் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் சேர்த்து ரூ.30,000 கோடி (2 சதவீதம்) மட்டுமே.

எதையுமே இலாப நோக்குடன் செய்யும் தனியார் நிறுவனங்கள் – பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கின்றன. அவர்களின் எந்த நடவடிக்கையும் இலாபத்தை எப்படிக் கூட்டுவது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஓட்டை, உடைசல் பேருந்துகளை குறைந்த வாடகையில் பணிக்கு அமர்த்தி விட்டு, பெற்றோர்களிடம் மாதாமாதம் ரூ.2000/- அல்லது ரூ.3000/- என வசூலித்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. இந்த இலாபவெறியினால் பலியானதுதான் இரண்டாவது வகுப்பு மாணவி ஸ்ருதியின் ஆயுள். எனவே, அரசு தனது கல்விக் கொள்கை சம்பந்தமான சுயபரிசீலனையை உடனே நடத்துவது நல்லது.

பள்ளி/கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணங்களை நிர்வாகங்கள் அமல்படுத்த மறுக்கின்றன. பாலர் பள்ளி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை நன்கொடை, கல்விக் கட்டணம் அல்லாத பிற கட்டணங்கள் என்ற வகையில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அமலாகிட சட்டவிதிகள் தெளிவாக இல்லை என உயர்நீதிமன்றமே சுட்டிக் காட்டியது. உரிய கட்டிடங்களும், விளையாட்டு மைதானங்களும், பரிசோதனைக் கூடங்களும், நூலகங்களும் இல்லாத பள்ளி/கல்லூரிகளுக்கு அரசுத்துறைகளால் அனுமதி வழங்கப்படுகின்றன.

நீதிமன்றங்களும், தேசீய உயர்கல்வி நிறுவனங்களான யுஜிசி, ஏஐசிடிஇ போன்றவை தலையிட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்த பின்பும், அரசு தலையிட மறுக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவான பிரமுகர்களை நிரப்ப முயற்சிகள் செய்யப்படுகின்றன; கையூட்டும், முறைகேடுகளும் இந்த விஷயத்தில் நடைபெறுவதாக ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. அரசு அதை ஊக்குவிக்கிறது.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களின் இடமாற்றலில், கவுன்சிலிங் முறையில் அமைச்சர்கள், அதிகாரிகள் தலையீடும், இலஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது கல்வியின் தரத்தின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் மரணம் ஏற்படும்போதும் அப்போதைக்கு அந்தப் பிரச்சனையில் தலையிட்டு அதைச் சரி செய்யும் போக்கு களையப்பட்டு, அனைவருக்கும் தரமான கல்வி, குறைந்த கட்டணங்களோடு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கல்வி சம்பந்தமான சட்டங்கள் மற்றும் பொதுச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்த வேண்டுமென தனியார் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது சமூகக் கட்டுப்பாட்டைக் (அரசுக் கட்டுப்பாட்டை) கொண்டு வர உரிய அமைப்புகளை அரசு சட்டரீதியாக உருவாக்க வேண்டும். அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்குப் போதுமான நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மிகச் சிறந்த கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் கருத்துக்களையும் அறிவதற்கான நிறுவனப்படுத்தப்பட்ட ஆலோசனை அமைப்புளை உருவாக்கி அரசு கல்விப் பிரச்சனையில் அவ்வப்போது உடனுக்குடன் தலையிடுவதே இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடாக அமையும்.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply