கவிஞர் இன்குலாப் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

 முற்போக்கு கவிஞர் தோழர் இன்குலாப் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கே.எஸ். சாகுல் ஹமீது என்ற இயற்பெயர் கொண்ட இவர், மார்க்சிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய பெயரை இன்குலாப் என்று மாற்றிக் கொண்டார். கல்லூரி மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்ற இவர், கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.

சென்னையில் 1970களில் சிம்சன் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது தோழர் வி.பி. சிந்தனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. கலை, கலைக்காகவே என்ற கருத்தை முற்றிலும் ஏற்காத இன்குலாப் தொழிலாளர்கள் போராட்டத்தைப் பற்றி  எழுதிய கவிதை முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியாக இருக்கிற போதே இன்குலாப் கவிதை பாட துவங்கினார். கவிஞர் இளவேனில் முன்னுரையுடன் வெளியான இன்குலாப் கவிதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் எவ்வித சமரசத்திற்கும் இடந்தராமல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை சார்ந்தே படைத்தவர் கவிஞர் இன்குலாப். அவர் எழுதிய பாடலான ‘மனுசங்கடா- நாங்க மனுசங்கடா’ தமிழகத்தின் முற்போக்கு மேடை தோறும் முழக்கப்பட்டது. அவ்வை, மணிமேகலை போன்ற நாடகங்கள் தனித்துவம் மிக்கவை. அவருடைய மறைவு முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...