காதுகளை களம் நோக்கி திருப்புங்கள்…

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.தி இந்து நாளேட்டின் செய்தியாளர் ஸ்மிதா குப்தாவுக்கு அளித்த நேர்காணல்…)

இந்தியாவில் வலதுசாரிகளின் வளர்ச்சியால் இடதுசாரி, ஜனநாயக மற்றும் சோசலிச சக்திகள் வலுவிழந்திருக்கின்றன. பாஜகவின் வளர்ச்சியை தடுத்திடத் தேவையான எதிர்நடவடிக்கைகள் இல்லாதது ஏன்?

கடுமையான முதலாளித்துவ நெருக்கடி நிலவும்போது உலகளாவிய அரசியலில் வலதுசாரிப் பாதையை நோக்கிய நகர்வு என்பது எப்போதும் நடக்கிறது. தற்போது இந்தியாவில், நவீன தாராளவாத ‘சீர்திருத்தங்கள்’ காரணமாக மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், இளைஞர்களை அரசியலில் இருந்து பிரித்து, அவர்களை அரசியலற்றவர்களாக மாற்றுகிற அவர்களிடையே அரசியலற்ற தன்மையை உருவாக்குகிற ஒரு பெரும் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. நவீன தாராளவாத சீர்திருத்தங்கள், சுயநலம் அடங்கிய வாய்ப்புகள் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தனி நபர் சுயநல சுகத்தை ஊக்குவிக்கின்றன. இத்தகைய அரசியலற்ற தன்மை வலதுசாரி அரசியலை நோக்கிய நகர்வுக்கே சாதகமாக இருக்கிறது.

எனினும், அதிகரித்து வரும் அசமத்துவம், நிச்சயமாக இடதுசாரிகளுக்கு மிக வலுவான வாய்ப்புகளையே ஏற்படுத்துகிறது அல்லவா?

இடதுசாரிகளின் முன்னேற்றத்துக்கு வாய்ப்பான களச்சூழல் உள்ளது. ஆனால், நாம் முதல் கேள்வியில் விவாதித்த விஷயங்களுடன், நமது தேசத்தின் சமூக கட்டுமானமும் சேர்ந்து, எங்களது இலக்கை அடையவிடாமல் தடுக்கின்றன. தனது தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன செயல்பாட்டின் மூலம் ஒற்றுமைக்கான போராட்டத்தை இந்துத்துவா சீர்குலைக்கிறது; சாதியம் மக்களைப் பிளவுபடுத்துகிறது; பொருளாதார சீர்திருத்தங்கள், அதிகரிக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்நிலையில் ஏற்படும் வீழ்ச்சி ஆகியவற்றால் துன்புற்று வரும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தால் மட்டுமே இடதுசாரிகள் வளர்ச்சியடைய சாத்தியம் ஏற்படும். மதவாத சக்திகளாலும், சாதிய அடிப்படையிலான அரசியல் திரட்டலாலும், அனைத்துத் தரப்பு மக்களின் ஒற்றுமையானது மிகப் பெரிய அளவிற்கு தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

சாதிய அடிப்படையிலான இந்திய சமூகத்தின் தன்மையை புரிந்து கொள்ள இந்திய இடதுசாரிகள் தவறிவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

இந்திய இடதுசாரிகள் அதனை புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல… அல்லது அவர்கள் அதற்கான தீர்வை அளிக்கவில்லையா?

இந்தியாவில் முதலாளித்துவம் இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும், சாதிய அடுக்குகளால் ஏற்கெனவே பிளவுபட்டுள்ள சமூக அமைப்பினுள் இன்னமும் வர்க்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சாதியும், வர்க்கமும் ஒன்றன் மீது ஒன்று படிந்திருப்பது இந்திய யதார்த்தமாகும். ஆக, புரட்சிகர இடதுசாரிகளின் முன்னேற்றம் என்பது, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகிய இரண்டின் மீதும் இருக்க வேண்டும் என்பதனையே இது உணர்த்துகிறது.இத்தகையதொரு திசை மாற்றத்தை உருவாக்கிடவே கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் முயன்று வருகிறோம். எங்களது கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில், இதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சமூக ஒடுக்குமுறை தொடர்பான பிரச்சனைகளில் தற்போது இடதுசாரி இயக்கம் மிகுந்த உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ‘ஜெய் பீம், லால் சலாம்’ போன்ற முழக்கங்கள் எழுந்துள்ளன.

தற்போது 17 எதிர்க்கட்சிகளின் குழுவிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பதால் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட தோற்றத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது?

எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட தோற்றத்தில் நிச்சயமாக அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது முற்றிலும் எதிர்பாராது நடந்த ஒன்றல்ல. குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாஜகவை ஒன்றுபட்டு எதிர்ப்பது குறித்து முதலில் பேசியவர்களில் பீகாரின் முதல்வர் நிதிஷ் குமாரும் ஒருவர்.இது குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் எங்களுக்குள் முன்பே நடந்தன. மேலும், அதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இதில் இணைந்தார். தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக பல முறை நாங்கள் விவாதித்துள்ளோம். சென்னையில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது கடைசியாக இது பற்றி விவாதித்தோம். மிக விரிவாக விவாதித்தோம். அதன் பின்னர், பாஜக தனது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு அவர் என்னை அழைத்து சென்னையில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

அப்படியானால், எது அவரது எண்ணத்தை மாற்றியது?

வேட்பாளரே என அவர் குறிப்பிடுகிறார்.ஆனால், ஜுன் 22 அன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரை காத்திருந்து, அங்கு தனது வாதங்களை அவர் எடுத்துரைத்திருக்கலாமே…அவ்வாறே அவர் செய்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு காரணியாக இருப்பது வேட்பாளரின் பெயர் அல்ல. அவசர நிலைக்கு எதிரான எழுச்சியை அடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அந்த ஒரு தருணம் தவிர, மற்ற எல்லா தருணங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இருந்திருக்கிறது. இது வேட்பாளரின் தனிப்பட்ட தகுதிகளைப் பொறுத்ததல்ல. யாரை யார் வேட்பாளராக நிறுத்துகிறார்கள் என்ற அரசியலே இது.

நமது அரசியல் சாசனத்தின் அடித்தளத்தை முழுமையாகப் புறக்கணித்து, தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக ஆர்எஸ்எஸ்-பாஜகவின் குண்டர் படைகள் வெளிப்படையாக தாக்குதலைத் தொடுத்து இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் ஆணவத்துடன் முன்னுக்குத் கொண்டு வரப்படுவதை கடந்த மூன்றாண்டுகளாக காண முடிந்தது. இத்தகையதொரு சூழலில், வேட்பாளரின் தகுதியைத் தாண்டி இதுபோன்ற சக்திகள் முன்மொழிந்துள்ள வேட்பாளரை ஏற்றுக் கொள்வது எங்களுக்கு சாத்தியமில்லை. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்ற ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோதும் கூட, அவருக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் எங்களுக்கு இல்லை என்றபோதும் கூட கேப்டன் லட்சுமி செகாலை நாங்கள் வேட்பாளராக முன்னிறுத்தினோம். ஏனென்றால், அப்துல் கலாம் அப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் முன்னிறுத்தப்பட்டார். அது ஓர் அரசியல் போட்டியாகும்.

சமீபத்தில் லாலு பிரசாத் அளித்த இப்தார் விருந்தில் அவரை நிதிஷ் குமார் வெளிப்படையாகக் கண்டித்தார். இந்த திடீர் கோபத்தில் நீங்கள் என்ன செய்தியைக் கண்டுணர்கிறீர்கள்?

2019 தேர்தல்களுக்கு காங்கிரஸ் அல்லாத கூட்டணியை வழிநடத்திடுவதற்கான ஆற்றல் வாய்ந்த நபராக கருதப்பட்டு வந்தவர் நிதிஷ் குமார். தற்போது அது குறித்து கேள்வி எழுந்துள்ளது. கிட்டத்தட்ட அதற்கான வாய்ப்பு மூடப்பட்டு விட்டது. பீகாரில் ஏற்படுத்தப்பட்ட மகா கூட்டணி அடிப்படையில் அகில இந்திய அளவிலும் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டு வந்தார். இவரது இந்த நடவடிக்கையால் அது உடைபடும் என்றால், பீகாரில் பாஜகவின் ஆதரவை நாடுவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் அவருக்கு இருக்காது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அவர் இவ்வாறு நடந்து கொள்ள எது தூண்டியிருக்கிறது? எதிர்க்கட்சிகளுக்கு 2015 பீகார் கலங்கரை விளக்கத்தைப் போன்றிருந்ததே…

இதற்கு அவர் மட்டுமே பதிலளிக்க இயலும்.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடமிருந்து சம தூரத்தில் இருப்பது பற்றி எப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பேசி வந்தது. ஆனால், தற்போது….

இந்த அரசின் மதவாத கருத்துக்களுக்கும் நமது மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை அவர்களது எண்ணமாகிய ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கான ஆர்எஸ்எஸ்சின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை உருவாக்கவே முக்கிய அழுத்தம் கொடுப்பது என கடைசியாக நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தை விட மிக வேகமாக பொருளாதார அசமத்துவத்தை அதிகரிக்கச் செய்திடும் நவீன தாராளவாத சீர்திருத்தக் கொள்கைகளையும் இவர்கள் அசுர வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். . அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியுடன் எந்தவொரு தேர்தல் உடன்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பாஜக அரசுக்கு உண்மையான எதிர்ப்பென்பது தலித்துகள் அல்லது விவசாயிகள் சார்ந்த சமூக இயக்கங்களிடமிருந்துதான் வந்து கொண்டிருக்கிறது. மையநீரோட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் அவ்வளவு வலுவாக எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை?

மகாராஷ்டிராவில் விவசாய இயக்கத்தின் ஒற்றுமையை நீடிக்கச் செய்து, நம்பிக்கைத் துரோகத்திற்கு எதிராக போராடி வருவது எங்களது விவசாய சங்கமே ஆகும். கூட்டுப் போராட்டக் குழுவின் அமைப்பாளர் எங்களது விவசாய சங்கத்தின் தலைவரே ஆவார்.எங்களது விவசாய சங்கத்தால் கட்டப்பட்ட கூட்டியக்கம் ‘‘பூமி அதிகார் அந்தோலன்’’ என்றழைக்கப்படுகிறது… மக்கள் இயக்கத்திற்கான தேசிய கூட்டமைப்பு சமூக இயக்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களோடு எங்களது விவசாய சங்கமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. அவர்கள் மிகப் பிரம்மாண்டமான பாதயாத்திரையை நாடு முழுவதிலும் நடத்தினார்கள். விவசாயிகளின் எல்லா இயக்கங்களுக்கான தயாரிப்பில், மக்களை சென்றடைவதில், மத்தியப் பிரதேசத்தில், தமிழகத்தில் என்ன நடந்து வருகிறது … இவை எல்லாவற்றிலும் இடதுசாரி அமைப்புகள்தான் மிகப் பிரதானமானவையாக இருந்து வருகின்றன.

ஆனால் இதற்கான நன்மதிப்பு இடதுசாரிகளுக்கு கிடைக்கப் பெறவில்லையே…

இந்த இயக்கங்கள் எல்லாம் அரசியல் கட்சியை முன்னிறுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல. இவையெல்லாம் பெருந்திரளான மக்களை இயக்கத்தினுள் கொண்டு வரவேண்டும்; ஏனெனில், இறுதியாக பகுத்தாய்ந்து பார்க்கும்போது, தற்போதைய மோடியின் விவரிப்புக்கு ஓர் மாற்று, அரசியல் மாற்று இருந்திட வேண்டும். அத்தகையதொரு மாற்று மக்களின் பேராதரவைப் பெற்ற இயக்கங்களின் வாயிலாகவே… செங்கொடியை ஏந்திச் செல்வது, பாதயாத்திரை இயக்கத்தை மேற்கொள்வது போன்றவற்றின் வாயிலாகவே தோன்றிட இயலும்.

மேற்கூறப்பட்ட அமைப்புகளை எல்லாம் நாங்கள் ஒன்றிணைக்காமல் எங்களது கட்சியின் தலையீடு வலுவானதாக இருந்திட முடியாது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். தலித்துகளின் பிரச்சனைகளிலும் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். ரோஹித் வெமுலாவின் தாயாருடன், பிரகாஷ் அம்பேத்கர், பால் திவாகர், பெஸவாடா வில்சன் மற்றும் ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மேடையைப் பகிர்ந்து கொள்வதை இதற்கு முன்பு எப்போது நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? தற்போது இது எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இத்தகையதொரு மாபெரும் கூட்டணியை அமைப்பதில் முக்கியமான சக்தியாக இடதுசாரி இயக்கம் இருந்து வருகிறது.

அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கம் என்பது தேர்தல் கூட்டணியாக இருக்காதா?

அது எப்படி செயல்படுகிறது என்பதனை நாம் 2019இல் பார்ப்போம். கடந்த காலத்தில் இந்தியாவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தேசிய முன்னணி – இடதுமுன்னணி- எதிர்ப்பியக்க ஒற்றுமை என்பது இருந்த ஒரு காலமும் உண்டு. காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; அதே நேரத்தில் எங்களது பிரதான கவனம் பாஜகவிற்கு எதிரானதாகும்.

சமீப ஆண்டுகளில் இடதுசாரி அமைப்பு சுருங்கி வருகிறது. சமீபத்தில் கேரளத்தில் நிகழ்ந்தது போல உங்களது ஊழியர்களை நீங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் மட்டும் இழந்து வரவில்லை, ஆனால் வேறுபல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமும் இழந்து வருகிறீர்களே?

மேற்கு வங்க நிலைமை பற்றி புரிந்து கொள்ள நீங்கள் மேலெழுந்தவாரியான புள்ளிவிவரங்களைத் தாண்டி பார்க்க வேண்டும். கள அளவில் அரசியல் தீவிரவாதமும், வன்முறையும் ஊடுருவியுள்ளது. தாங்கள் நீடித்திருப்பதற்காகவே பல சங்கங்கள் திரிணாமுல் காங்கிரசை தொடர்ந்து எதிர்த்திட இயலாமல் உள்ளன.

ஆனால், இடதுசாரிகள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறதே..?

இது போன்ற செயல்களை எங்களது கட்சி செய்திருந்தால், இன்றைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்க முடியாது.

பாஜக குறித்து என்ன சொல்கிறீர்கள்? இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தெற்கு கோண்ட்டை சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலில் திரிணாமுல், பாஜகவிற்கு அடுத்து நீங்கள் மூன்றாவது இடத்திற்கு வந்தீர்கள்…

திரிணாமுல் கட்சியின்பால் பாஜக கடைப்பிடிக்கும் அணுகுமுறை மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை எதிர்ப்பதில் திரிணாமுல் காங்கிரசின் திறனை அரித்துப் போகச் செய்கிறது. எப்போதெல்லாம் அவர்கள் நெருக்கடியை உருவாக்குகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களது அமைச்சர்களில் ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ கைது செய்யப்படுகிறார்கள். நாரதா, சாரதா, இந்த ஊழல்கள் எல்லாம் … இவற்றையெல்லாம் விட, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை திருப்திப்படுத்தும் முயற்சியில் மம்தா பானர்ஜி அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளின் எதிர்விளைவாக இந்து அடிப்படைவாதிகள் ஒன்றிணைவது இடதுசாரிகளாக உள்ள எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இந்த தேர்தலிலும் இதுவே நடைபெற்றது. மத ரீதியான திரட்டல் கூர்மையாக நடைபெற்ற நிலையில் இடதுசாரிகள் வெளியில் தள்ளப்பட்டனர். பாஜகவும், திரிணாமுலும் ஒருவரை ஒருவர் ஊட்டி வளர்க்கின்றனர்… மேற்கு வங்கத்தில் மக்களை மதரீதியாக திரட்டுவது என்பது அம்மாநிலத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்குமே மிகப் பெரிய பிரச்சனையாக மாறப் போகிறது.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு போன்ற உங்களுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

‘‘மிக அதிகமான ஆண்டுகளை சிறைச்சாலையில் கழித்திடுவதற்கான வாய்ப்பில்லாத தலைமுறையில் நீங்கள் பிறந்திருப்பது துரதிர்ஷ்டமானது. சிறைச்சாலையில் இருந்தால்தான் நீங்கள் உங்களது வேலையை, எழுத்து வேலையை முறையாகச் செய்திட இயலும். காந்தி, நேரு போன்றவர்களைப் பாருங்கள் – அவர்கள் எழுதியவற்றில் பெரும்பாலானவை சிறையில் இருந்தபோது எழுதப்பட்டவை ஆகும். ஆனால், யதார்த்த அரசியல் என்பது எப்போதும் உங்களை மிகுந்த சுறுசுறுப்போடு வைத்திருக்கும். அதன் காரணமாக, சிறைச்சாலையில் இருக்கும் போது கிடைக்கும் படிப்பினைகளும், அவற்றின் பிரதிபலிப்புகளும் இல்லாத காலமாக அக்காலகட்டம் இருந்திடும்’’ என பி.டி.ரணதிவே ஒருமுறை என்னிடம் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டது என்னவென்றால், உங்களது காலில் நிற்பது எப்படி என்று சிந்தியுங்கள்; உங்கள் தலையை உங்களது தோள்களில் தாங்குங்கள்; உங்களது காதுகளை களத்தை நோக்கித் திருப்புங்கள் என்பதுதான்… பாருங்கள், நாங்கள் ஒரு நாள் தாமதித்தோம், நிதிஷை நாங்கள் இழந்தோம்.

(நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ்)

தமிழில்: ராகினி

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...