காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு சிபிஐ(எம்) இரங்கல்!

காந்தியவாதியும், மதுவிலக்கு ஆர்வலருமான சசிபெருமாள் (59), கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்திய போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். பூரண மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து மது இல்லாத தமிழகம் உருவாவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் சசி பெருமாள் அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். குறிப்பாக 2013ல் சென்னையில் காலவறையற்ற பட்டினி போராட்டத்தை நடத்தினார். பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதான பின், சிறைக்குள்ளும் உண்ணா நோன்பைத் தொடர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் இந்த ஒற்றைக் கோரிக்கையை மையப்படுத்திய போராட்டங்கள் சூழ்ந்ததாகவே அமைத்துக் கொண்டார்.

போதை பழக்கத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்கள், மதுவிலக்கைப் படிப்படியாக அமல்நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளன. இச்சூழலில், சசி பெருமாள் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். போராட்டக் களத்திலேயே உயிர் நீத்த சசி பெருமாள் அவர்களின் கனவான “மதுவற்ற தமிழகம்” உருவாகத் தொடர்ந்து போராடுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். சாராய சாம்ராஜ்யங்களுக்கு எதிரான போராட்டத்தில் பல களப்பலிகளைக் கொடுத்த பாரம்பர்யத்தை நினைவு கூர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டத்தில் உரிய பங்கினை செலுத்தும் என்று உறுதி கூறுகிறோம்.

இத்தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...