காலுக்கு செருப்புமில்லை! கால்வயிற்று கஞ்சியுமில்லை!

தாம்பரத்திலுள்ள தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் உருவச்சிலை

1907 ஆக. 21 நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் ப.ஜீவானந்தம். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.

அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் ஜீவா. அப்போது 17 வயது!

1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சிறையில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார். அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என வாழ்ந்தவர். நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களில்…

“கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடாநாடி எழுந்தது பார் குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம்ஒன்றே நடை நெஞ்சு
தீப்பொறிப் பார்வை ஒன்றே !
சாடிக் குதித்து முன்னே முன்னேறித்
தாவியே செல்வதைப் பார்”.

இவைகள் இவரின் புகழ்பெற்ற பாடல் வரிகள், ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சி பெறச் செய்தன.

‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959 இல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.

1961 இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

தோழர் ஜீவா அவர்களின் சுயநலமற்ற அரசியல், கலை, இலக்கிய ஆளுமை கண்டு, அவருக்கு வீடு தர முன்வந்த அரசுக்கு தோழர் ஜீவா சொன்ன பதில்… “என்னை சுற்றியுள்ள ஆயிரமாயிரம் குடிசைகள் கல் வீடாக மாற்றுங்கள் பிறகு நீங்கள் தரும் வீட்டை ஏற்கிறேன்” என்று மறுத்தவர்.

தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். இன்று அவரின் பிறந்த தினம்!

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...