கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனால் சிவன்ராஜின் பற்கள் உடைக்கப்பட்டதோடு உடம்பு முழுமையும் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பி முருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.காசி, குருசாமி, ஆகியோர் தாக்குதலுக்குள்ளான சிவன்ராஜை அழைத்து வந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தோழர்கள் தலையிட்டு கடுமையான காயம் இருக்கும்போது எப்படி டிஸ்சார்ஜ் செய்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்த பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கும் அதேநிலை 29ம் தேதி மாலை 6:30 மணி அளவில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவன்ராஜை உடல்நிலை சரியாகிவிட்டது என்று கூறி இரவு 12:30 மணி அளவில் யூரின் டியூப்போடு வெளியே அனுப்பிவிட்டனர். இரவு முழுவதும் காயம்பட்ட நபரும் அவரது குடும்பத்தாரும் வெளியிலேயே உட்கார்ந்து தங்கிவிட்டு 30ம் தேதி அதிகாலை நமது தோழர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்து இரவோடு இரவாக நோயாளியை வெளியேற்றிய மருத்துவர் மற்றும் செவிலியரின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காயம்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்க உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்த அடிப்படையில் இன்றைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக குற்றவாளிகள் மீது செக்கானூரணி காவல்நிலையத்தில் குற்ற எண் 819/ 2020 குற்ற பிரிவுகள் 147,148,294(b),324,506(2), வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் 3(1)(r),3(1)(s),3(2)(va) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...