காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் சிபிஐ(எம்) கண்டனம்

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என நேற்றைய தினம் போராடிய அப்பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இளைஞர்கள் ரத்தக் காயம் ஏற்படும் வகையில் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் அவமரியாதை செய்ததோடு கம்புகளாலும், கைகளாலும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கூடுதல்  கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அறைந்ததில் ஒரு பெண்ணின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வேறு சிலர் மீது காவல்துறை வழக்கு தொடுத்து சிறையில் அடைக்க முயல்கிறது. தங்கள் பேரூராட்சி பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று போராடுவதற்கு கூட தமிழக காவல்துறை அனுமதிக்க மறுப்பதும், போராடுகிறவர்கள் மீது மிருகத்தனமான வன்முறையை ஏவி விடுவதும் அதிகரித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை கள்ளத்தனமாக மீறும் முயற்சியில் மாநில அரசு முயற்சித்து வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களை காவல்துறையின் துணையோடு வன்முறையின் மூலமாக முறியடிக்க தமிழக அரசு முயல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சாமளாபுரத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல் கடுமையானது, அநாகரீகமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, தாக்குதலில் ஈடுபட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், உடனடியாக இடை நீக்கம் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிறையிலடைக்கப்பட்டுள்ள மற்றும் காவல்துறையின் தேடுதல் பட்டியலில் உள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும், சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும் தங்கள் பேரூராட்சி பகுதிக்குள் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எந்த மதுக்கடைகளையும் அந்த பேரூராட்சி பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...