காவல்துறையின் பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி சமூகப் பெண்கள் லட்சுமி (20),   வைதேஷ்வரி(20), ராதிகா(17), கார்த்திகா ஆகியோரை 22-ம் தேதி இரவு   திருக்கோவிலூர் காவல்துறையினர் பாலியல் வன்புணர்ச்சி கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

திருக்கோவிலூர் காவல்துறையினர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரை ஒரு திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு 22-ஆம் தேதி பிடித்துச் சென்றுள்ளனர். அன்று மாலையே காசியின் மனைவி லட்சுமி, தங்கை ராதிகா, தம்பி மனைவி கார்த்திகா, உறவினர் வைதேஷ்வரி ஆகியோரையும் காசியின் தாயார் வள்ளியையும் விசாரணைக்கென்று அழைத்துச் சென்று வள்ளியின் கண் முன்னாலேயே தைலமரக் காட்டில் இளம்பெண்கள் நால்வரையும் கொடிய வன்புணர்ச்சிக் கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர். அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் காவல்துறையினர் அச்சுறுத்தியுள்ளனர்.

சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த காவல்துறையின் வன்புணர்ச்சி கொடுமை  திருக்கோவிலூர் மண்டபம் கிராமத்து இருளர் பழங்குடி இனப்பெண்களுக்கும் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் 26-ம் தேதி அன்று கொடுத்த புகாரின் பேரில் அன்று காலை 11 மணியிலிருந்து 27-ம் தேதி காலை 8.30 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்திலேயே வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 பெண்களையும் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை. மாறாக, விடிய, விடிய  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு எந்த சட்டம் இடம் தருகிறது? இது சம்பவத்தின் தடயங்களை மறைக்கும் நடவடிக்கையா? புகாரில் உண்மை இல்லையென்று பத்திரிகையாளர்களிடம் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, பல்வேறு சந்தேகங்களுக்கும் இடம் அளிக்கிறது.

திருக்கோவிலூர் நீதித்துறை  நடுவர் விசாரணைக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி வழங்கிடவும்  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழங்குடி இனப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து ஒரு முழு விசாரணை நடத்திடும் வகையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

குற்றவாளிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும்,  பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்தம் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply