காவல்துறை அத்துமீறல்கள் – லாக்கப் மரணங்கள்-முதலமைச்சர் தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் சமீப காலமாக காவல்துறையின் அத்துமீறல்கள், லாக்கப் மரணங்கள், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷமீல் அகமது என்பவரை போலீசார் கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக தெரிகிறது. மறுநாள் விடுவித்து மேல்சிகிக்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், 25-ம்தேதி சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்படடு 26-ம் தேதி மாலை அவர் உயிரிழந்திருக்கிறார். இதையொட்டி போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் ஆம்பூர் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மும்தாஜ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டதையொட்டி காவல்துறையினர் டேனியல் என்பவரின் மனைவி எலிசபெத்தை விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து, உதைத்து கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். இதையொட்டி பி.என்.பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரையும் நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்து சென்று ஒருவார காலம் காவலில் வைத்து அடித்துள்ளனர். இறக்கும் தருவாயில் ஜூன் 5ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சுப்ரமணி இறந்து விட்டதாக காவல்துறை அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 8 நாட்களாக சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாலே சுப்ரமணி இறந்துள்ளதாகத் தெரிகிறது. மும்தாஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு உரிய முறையில் விசாரணை நடத்தாமல் சிலரை துன்புறுத்தி சித்ரவதை, லாக்-அப் மரணம் போன்ற கொடுமைகளை காவலர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் இயக்கங்களும் போராடி வந்த போதிலும், இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோன்று சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் மூன்று நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சாதி மறுப்பு, காதல் பிரச்சனைகளில் சாதிய மேலாதிக்க சக்திகள் கௌரவக்கொலை உள்ளிட்ட கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறை இதுகுறித்து உரிய முறையில் தலையீடு செய்வதில்லை. அரசு நிர்வாகமும் இதில் அலட்சியம் காட்டுகிற போக்கு நீடிக்கிறது.

இதேபோன்று கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணும், சிவராமகிருஷ்ணன் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து பதிவு திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்போடு வாழ்வதற்கான உதவிகள் புரிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் சிவராமகிருஷ்ணன் கீழ்சாதிக்காரன், பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டி, தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களையும், தோழர் சுகந்தி அவர்களையும் மிரட்டுகிற தொணியில் சாதி வெறியர்கள் பேசியுள்ளனர். தோழர் சுகந்தி அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல்துறை இயக்குநர் அவர்களிடம் தோழர் சுகந்தி புகார் மனு அளித்துள்ளார். இதன் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுரையைச் சேர்ந்த அஞ்சுகம் என்ற தலித் பெண்ணை ராமேஸ்வரத்தை சேர்ந்த பிற்படுத்தப்படட வகுப்பைச் சார்ந்த சேதுபாஸ்கர் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி கர்ப்பமடையச் செய்துள்ளார். பிறகு, அஞ்சுகத்தை கைவிட முனைந்த போது, காவல்துறையில் புகார் செய்யப்பட்டு திருமணம் நடந்துள்ளது. சேது பாஸ்கரின் உறவினர்கள் அஞ்சுகத்தை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். இதையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ராமநாதபுர மாவட்டத்தலைவர் வடகொரியா அவர்கள் காவல் ஆய்வாளரிடம் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த தோழர் வடகொரியா மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சி.ஆர். செந்தில்வேல் மீதும் வழக்கு பதிவு செய்து, செந்தில்வேலை கைது செய்து சிறையிலடைத்தனர்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராகவும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் காவல்துறை பழிவாங்கும் நோக்கோடு அணுகுகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வகையில் நியாயம் கிடைக்க எவ்வித நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்வதில்லை என்பது மேற்கண்ட சம்பவங்களால் தெரியவருகிறது.

காவல்துறையின் இத்தகைய போக்குகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ச்சியாக நடந்து வரும் காவல்துறையின் இத்தகைய போக்குகளையும், அத்துமீறல்களையும், காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற தமிழக முதலமைச்சர் தலையிட்டு தவறுகள் செய்திருக்கும் காவல்துறையினர் மீது உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...