காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவின்படி அக்டோபர் 15ஆம் தேதி வரை விநாடிக்கு 9000 கன அடி திறந்து விட வேண்டுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற கர்நாடக அரசு மறுத்து தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை மொத்தமாக நிறுத்திவிட்டது. மறுபக்கம் கர்நாடக ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக அரசின் இத்தகைய அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு சவால்விடும் போக்காகும். கர்நாடக மாநில அரசின் இப்போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தனது குறுகிய நலனுக்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் அங்குள்ள கட்சிகள் காவிரி நதியில் தமிழகத்திற்குரிய பங்கை முற்றிலும் மறுக்கும் வகையில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் நலன் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறுவை சாகுபடி அறவே நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் இல்லாமல் போகக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே தாமதமில்லாமல் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே தீர்மானித்த தண்ணீரை திறந்து விட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவாதிக்கவும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது. அத்துடன் சம்பா சாகுபடியைப் பாதுகாக்க தண்ணீரை தொடர்ந்து பெறும் வகையில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக்குழு பிரதமரை சந்தித்து வற்புறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

Leave a Reply