காவிரி நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதீமன்ற தீர்ப்பை அமலாக்கிட CPIM வலியுறுத்தல்

காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு அமலாக்க முடியாது எனக்கூறுவது ஏற்க முடியாதது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.  காவிரி நதிநீர் பிரச்சனை மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்றும், ஒருவாரம் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் விடவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை அமலாக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் சவால் விடுகின்ற ஆபத்தான போக்காகும். கர்நாடக முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக பிஜேபி கலந்து கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி கட்சி இரண்டு மாநிலங்களுக்கிடையில் நதிநீர் பிரச்சனையில் மாறுபட்ட கருத்து ஏற்படுகிற போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு இன்னும் காலதாமதப்படுத்திடாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மாநில அரசு இப்பிரச்சனையில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த ஆதரவைப் பெற்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...