காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு அமைத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அமலாக்கிட, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவினையும் மத்திய அரசு அமைத்திட வேண்டும். இதனை செய்திட வேண்டிய மத்திய அரசு இதுவரை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கர்நாடக அரசு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்துவது, அர்க்காவதி நதியை புனரமைப்பது ஆகிய இந்த இரண்டு திட்டங்களும், இயற்கை நீரோட்டத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி, தமிழக பாசனப் பகுதிகளுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
கர்நாடகா அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் நடுவர் தீர்ப்பு அமலாக்கத்தை கண்காணிக்க இடைக்கால குழு அமைத்துள்ள நிலையில், கர்நாடக அரசின் செயல்பாடு காவிரி பிரச்சனையில் நீதித்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்து விடும்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரிப்படுகையில் எவ்விதத் திட்டங்களையும் கர்நாடக அரசு மேற்கொள்ளாமல் இருப்பதே சரியான நடைமுறையாக இருக்கும். மத்திய அரசு இதனை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply