காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது மாநில அரசுகள் தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இப்பிரச்சனை மீது மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசினுடைய வாதங்களை எல்லாம் கேட்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம் இன்று காலை மத்திய அரசினுடைய மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டதுடன் நடுவர்மன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வழங்க வேண்டுமென ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு தொடரும் எனவும் குறிப்பிட்டதுடன் வழக்கின் மறு விசாரணையை டிசம்பர் 15ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தினுடைய இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அதே சமயம் இந்த தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மீது மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பாக உள்ளது.

எனவே, மேலும் காலம் கடத்தாமல் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரு குறுகிய காலவரையறைக்குள் விசாரித்து இறுதி தீர்ப்பினை வழங்கிட வேண்டுமெனவும், அத்தீர்ப்பின் ஒரு பகுதியாக நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பின் மீது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை பெறுவதற்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தேவையான அனைத்து வாதங்களையும் உறுதியாக எடுத்து வாதாட முன்வர வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...